விரைவில் நடவடிக்கை எடுக்கக் கோரி கழிவுநீரில் அமர்ந்து சமூக ஆர்வலர் போராட்டம்



                    

குரோம்பேட்டையில் கழிவு நீரை அகற்றக் கோரி, கழிவுநீரில் அமர்ந்து சமூக ஆர்வலர் மீனாட்சி சுந்தரம் என்பவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

                        செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட புதுவை நகர் பகுதியில் ஏராளமான வணிகர்கள் கடை நடத்தி வருகின்றனர்.
                    இந்நிலையில் புதுவை நகர் பகுதியிலுள்ள சாலையின் நடுவே குண்டும் குழியுமாக இருப்பதாகவும், மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கால்வாயில் செல்லும் கழிவுநீர், அருகிலுள்ள கடைகளுக்குள் செல்கிறது. எனவே சாலையை சீரமைக்கக் கோரி திடீரென அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கழிவுநீர் மத்தியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த குரோம்பேட்டை நகர காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட மீனாட்சி சுந்தரத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் நகராட்சி ஆணையர் மற்றும் துப்புரவு அலுவலர், கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து அதிகாரிகள் அளித்த வாக்குறுதியை ஏற்று மீனாட்சி சுந்தரம் போராட்டத்தை கைவிட்டார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் மீனாட்சி சுந்தரம் கூறியதாவது: இந்தப் பகுதியில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. மேலும் அருகில் உள்ள ஹோட்டல்களில் இருந்து இந்தப் பகுதிக்கு கழிவுநீர் வருகிறது. இதைத் தடுத்து நிறுத்தக் கோரி பலமுறை பல்லாவரம் நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை.

ஒவ்வொரு முறை மனு கொடுக்கும்போதும் நடவடிக்கை எடுப்பதாகக் கூறும் அதிகாரிகள் அதன் பின்பு கண்டுகொள்வதே இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments