பட்டுக்கோட்டை: ஆற்றுக்குள் கிடந்த மின்கம்பி - மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள் உயிரிழந்த சோகம்!

பட்டுக்கோட்டை அருகே ஆற்றுக்குள் மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் ஆட்டுக்கு இலை, தழை வெட்டச் சென்ற அண்ணன், தம்பியான இரண்டு சிறுவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். சிறுவர்களின் பெற்றோர் சம்பவ இடத்தில் கதறித் துடித்தது அனைவரையும் கலங்கச் செய்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரின் மனைவி முத்துலெட்சுமி. இவர்கள் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர், கல்யாண ஓடை கிராமத்தில் குடியேறி, விவசாயக் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்திவருகின்றனர்.இவர்களுக்கு 7-ம் வகுப்பு படிக்கும் கெளதம், 5-ம் வகுப்பு படிக்கும் தினேஷ் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவரும் அதே பகுதியிலுள்ள அரசுப் பள்ளி ஒன்றில் படித்துவருகின்றனர்.

மாரியப்பன், தன் வீட்டில் சில ஆடுகள் வளர்த்துவந்தார். அந்த ஆடுகளுக்கு தினமும் கெளதம், தினேஷ் இருவரும் தீவனம் வைப்பதையும், அருகிலுள்ள காட்டுக்குச் சென்று இலை தழைகளை வெட்டி ஆட்டுக்குக் கொடுத்துவருவதையும் வழக்கமாகக்கொண்டிருந்தனர். இந்தநிலையில் சில தினங்களாகப் பெய்த தொடர் மழை காரணமாக இவர்களால் இலை, தழை வெட்டச் செல்ல முடியவில்லை.

ஆடுகள் சரியாகச் சாப்பிடாமல் இருந்ததை எண்ணி கவலையடைந்த கெளதமும் தினேஷும் இன்று காலை 8 மணிக்கு, `ஆட்டுக்கு இலை, தழை வெட்டிக்கிட்டு வர்றோம்’ என வீட்டில் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

அப்போது கல்யாண ஓடை அத்திவெட்டி சாலையிலுள்ள கல்யாண ஓடைப் பாசன வாய்க்காலில் மின் கம்பி அறுந்து ஆற்றுக்குள் கிடந்திருக்கிறது. மழை நேரம் என்பதால் ஓரளவுக்கு தண்ணீரும் ஆற்றில் ஓடிக்கொண்டிருந்தது. இலை, தழை வெட்டுவதற்காகச் சென்ற கெளதம், தினேஷ் இருவரும் ஆற்றின் கரையில் இறங்கியிருக்கின்றனர்.

மின்கம்பி அறுந்த நிலையில் மின்சாரம் நிறுத்தப்படாமல் இருந்ததால், ஆற்றுத் தண்ணீருக்குள் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்திருக்கிறது. இதை அறியாத அந்தச் சிறுவர்கள் ஆற்றுக்குள் கால் வைத்ததுமே மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். அந்த வழியாகச் சென்ற சிலர் மாரியப்பனுக்குத் தகவல் அளித்திருக்கிறார்கள்.

இதையடுத்து மாரியப்பனும் முத்துலெட்சுமியும் பதறியடித்து ஓடி வந்தனர். இரண்டு மகன்களும் சாலையோரத்தில் சடலமாகக் கிடந்ததைப் பார்த்துக் கதறினர். முத்துலெட்சுமின் மகன்களின் உடலை மடியில் போட்டுக்கொண்டு மார்பில் அடித்துக்கொண்டு கதறினர்.

`ஆடு பட்டினியா கெடக்கும்மா... இலை, தழை வெட்டிக்கிட்டு வர்றேன்னுட்டு போனீங்களேடா... இப்படி ஒரேயடியாக விட்டுட்டுப் போயிட்டீங்களே’’ என முத்துலெட்சுமி கதறினார். `தம்பி எந்திரிங்கடா...’ என்று எழுப்பிக்கொண்டே மாரியப்பனும் கலங்கித் துடித்தார்.


பெற்றோரின் அழுகுரல்களைக் கேட்டு அந்தப் பகுதியில் பெரும் கூட்டம் கூடியது. கெளதம், தினேஷின் பெற்றோரைச் சமானதானப்படுத்தித் தேற்ற அருகிலிருந்தவர்களால் முடியவில்லை. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து அந்தப் பகுதியினரிடம் விசாரித்தோம். ``ஆடுகளுக்குச் சாப்பிட ஒன்றும் இல்லை என்பதால் இலை, தழை வெட்டிக்கொண்டு வருவதற்காக சிறுவர்கள் சென்றிருக்கிறார்கள். மழை காரணமாக மின் கம்பி அறுந்து விழுந்து ஆற்றுக்குள் கிடந்திருக்கிறது. இந்தச் சிறுவர்கள் ஆற்றோரத்திலிருந்த ஒரு சின்ன மரத்தில் ஏறி இலைகலுள்ள மரக்கிளைகளை வெட்டியிருக்கிறார்கள்.

பின்னர் ஆற்றின் கரையில் இறங்கியபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கிறார்கள். `ரெண்டு பேருமே ஆட்டின் மேல் உசுரையேவெச்சுருந்தாங்க’ன்னு அவங்க வீட்டுக்கு அருகே வசிப்பவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்கும்போது எங்களுக்கே மனது தாங்கவில்லலை. அந்தச் சிறுவர்களின் பெற்றோரால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்? அவர்கள் இருவரும் கதறித் துடித்த சத்தம் இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

பொங்கலையும் தாண்டி இந்தச் சம்பவம் எங்கள் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அரசு இந்த ஏழைப் பெற்றோருக்கு எதாவது நிவாரணம் வழங்கினால், கொஞ்சம் ஆறுதலைத் தரும். இந்தச் சம்பவம் குறித்து மதுக்கூர் போலீஸார் விசாரணை செய்துவருகிறார்கள்’’ என்று தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments