ஒரு மணி நேரத்துக்கு ரூ.875 நெல் அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு பெற்று பயன்பெறலாம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்களை விவசாயிகள் வாடகைக்கு பெற்று பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு வாடகையாக ரூ.875 பெறப்படுகிறது. புதுக்கோட்டை கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்ததாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக தொடர்ந்து நடந்து வருகிறது. புதுக்கோட்டை மற்றும் இதர மாவட்டங்களில் இருந்து வரப்பெற்றுள்ள நெல் அறுவடை இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. அறுவடைக்கு தயாராக உள்ள மழைநீர் தேங்கி ஈரம் இன்னும் உள்ளதால் டயர் மாடல் அறுவடை இயந்திரங்கள் பயன்பாடு குறைந்து செயின் டைப் அறுவடை இயந்திரங்கள் தேவை அதிகரித்துள்ளது.

நெல் அறுவடை இயந்திரங்கள், டயர் மாடல் அறுவடை இயந்திரங்களை வேளாண்மை பொறியியல் துறை மூலம் வாடகை ஒரு மணிக்கு ரூ.875 என்ற வீதத்தில் விவசாயிகள் பெற்று பயன்பெறலாம். கூடுதலாக தற்போது தனியாருக்கு சொந்தமான நெல் அறுவடை இயந்திரங்கள் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வரப்பெற்று இயக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் நலன்கருதி வாடகை தொகையை ஒரு மணி நேரத்துக்கு செயின்வகை வண்டிக்கு ரூ.2,100 மற்றும் டயர் வகை வண்டிக்கு ரூ.1,600 என்ற அளவில் வாடகை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இம்முறைப்படுத்தப்பட்ட வாடகை அடிப்படையில் வாடகை வசூல் செய்து கொள்ள தனியார் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் கேட்டு கொள்ளப்படுகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட வாடகை தொகையை விட கூடுதலாக விவசாயிகளிடமிருந்து வாடகை வசூல் செய்யப்படுவதாக புகார் ஏதும் பெறப்பட்டால் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விபரங்களுக்கு 04322-221816 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9443405997, 9442178763 என்ற அலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments