சூழ்நிலையை பொறுத்து கிராமசபை கூட்டம் நடத்துவது குறித்து முடிவு- ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல்




தமிழகத்தில், பஞ்சாயத்து சட்டப்படியும், கிராமசபை கூட்ட விதிகளின் படியும் ஜனவரி 26-ந்தேதி குடியரசு தினம், மே 1-ந்தேதி உழைப்பாளர் தினம், ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர தினம், அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி என்று ஆண்டுக்கு 4 முறை, கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால், கொரோனா பரவல் காரணத்தினால், கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி நடக்க இருந்த கிராமசபை கூட்டங்களை ரத்து செய்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.

இதை எதிர்த்து, தி.மு.க., எம்.எல்.ஏ., கே.என்.நேரு, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘‘மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு, நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுவதால், அச்சட்டங்களுக்கு எதிராக கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றும் படி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். இதன் காரணமாகவே தமிழக அரசு, கிராமசபை கூட்டங்களை ரத்துசெய்துள்ளது. எனவே, கிராம சபை கூட்டங்களை நடத்த உத்தரவிடவேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

அதேபோல, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் மவுரியாவும் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், கிராமங்களின் நிர்வாகம், வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்க கூட்டப்படும் கிராமசபை கூட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. முக்கிய காரணமும் இல்லாமல் கிராமசபை கூட்டங்களை ரத்துசெய்ய முடியாது. எனவே, கிராமசபை கூட்டங்கள் கூட்டப்படுவதை உறுதி செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்குகள் எல்லாம் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால், இந்த வழக்குகளுக்கு பதில் அளிக்க கால அவகாசம் கேட்டார்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆஜரான வக்கீல் விஜயன் சுப்பிரமணியம், ‘‘ஏற்கனவே அக்டோபர் 2-ந்தேதி கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது வருகிற 26-ந்தேதி குடியரசு தினத்தன்று நடத்தப்பட வேண்டிய கிராமசபை கூட்டம் குறித்து இதுவரை அரசு தரப்பில் எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை என்பதால், இந்த வழக்கை வருகிற 25-ந்தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும். அதற்குள் தமிழக அரசை பதிலளிக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்து வாதிட்டார்.

அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல், ‘‘தற்போது நிலவும் சூழ்நிலையை பொறுத்து வரும் 26-ந்தேதி கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்யப்படும். அது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்’’ என்று கூறினார். இதையடுத்து, வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments