ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பதில் சிக்கல்: சலுகை ஏற்படுத்தி தர வெளிநாடு வாழ் இந்தியர்கள் வலியுறுத்தல்
கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையால், மத்திய அரசு வாகன ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க வரும் மார்ச் வரை அவகாசம் நீடித்துள்ளது. இந்நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் வாகன ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க நேரில் ஆஜராக வேண்டிய விதிமுறையால் நேரில் வர முடியாமல் கவலை அடைந்துள்ளனர்.

மத்திய அரசு வாகன ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட அரசு சார்ந்த பணிகளுக்கு கால அவகாசத்தை நீடித்து உத்தரவிட்டது. கடந்த டிசம்பர் 31-ம் தேதி வரை வாகன ஓட்டிகள் உரிமம் புதுப்பிக்க உத்தரவிட்டிருந்ததை நீடித்து வரும் மார்ச் 31-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது. ஆனால், வெளிநாட்டில் இருந்து இந்தியா வரக் கூடிய சூழல் இல்லாத வெளிநாடு வாழ் வாகன ஓட்டுநர்கள் கவலை அடைந்துள்ளனர்.இதுதொடர்பாக சிங்கப்பூரில் இருந்து சேலம் திரும்பியுள்ள வெளிநாடு வாழ் இந்தியர் கரிகாலன் கூறியதாவது:

இந்தியாவில் இருந்து பல லட்சம் பேர் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். இவ்வாறு பணிபுரியும் வெளிநாடு வாழ் இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் கார் வைத்துள்ளனர்.

இவர்களின் கார் ஓட்டுநர் உரிமம் கடந்த ஆண்டுகளில் பலருக்கும் காலாவதியான நிலையில், ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளனர். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தொகையும், புதுப்பித்தல் செலவும் குறைவு என்பதால், வெளிநாடு வாழ் இந்தியர்கள் சொந்த ஊர் வந்து ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்து செல்வது வழக்கம்.

தற்போது, வாகன ஓட்டுநர் உரிமம் காலவதியாகி புதுப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள், நேரில் ஆஜராகி வீடியோ முன்பு அமர்ந்து புகைப்படம் எடுத்து கையெழுத்திட வேண்டும். ஆனால், பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் கரோனா தொற்று ஊரடங்கு அமலில் உள்ளதால், இந்தியா திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்.

மேலும், பல நாடுகளில் விமான போக்குவரத்து இல்லாத நிலையில், வந்தே பாரத் விமான சேவை மூலம் முன்கூட்டியே பதிவு செய்திருந்தால் மட்டுமே சொந்த ஊர் திரும்ப முடியும்.

மேலும், இந்தியா வந்து விட்டு மீண்டும் வெளிநாடுகளுக்கு திரும்புவதில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதும், மீண்டும் திரும்பி செல்வதில் சிரமங்கள் உள்ளன.

ஆன்-லைன் மூலம் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வாகன உரிமம் புதுப்பிக்க வசதி இருந்தாலும், உரிமம் பெறும் நாளில் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு நேரில் வந்தாக வேண்டிய விதிமுறை நடைமுறையில் உள்ளன. கரோனா தொற்று பரவல் காரணமாக ஒவ்வொரு நாடும் ஒவ்வொருவிதமான கட்டுப்பாடுகளையும், விதிமுறை வகுத்து வைத்துள்ளதால், சாதாரணமாக சொந்த ஊர் திரும்பி வாகன ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பது கடினமானது.

ஏற்கெனவே கார் ஓட்டுநர் உரிமம் பெற்று அனுபவம் வாய்ந்தவர்களே வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆன்-லைன் மூலமாக வாகன ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கும் வகையில் விதிமுறையை மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:

வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாகன ஓட்டுநர் உரிமத்தை ஆன்-லைன் மூலமாக புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் தினமும் 60 பேருக்கு வாகன ஓட்டுநர் உரிமம் புதுப்பித்துக் கொடுக்கப்படும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் வாகன ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க முன்அனுமதி பெற்று நேரில் ஆஜராகி, உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஆன்-லைன் மூலமாக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வாகன ஓட்டுநர் உரிமம் புதுப்பித்துக் கொள்ள விதிமுறையில் இடமில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments