9-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடத்திட்டங்கள் குறைப்பு- கல்வித்துறை தகவல்
கொரோனா நோய்த்தொற்று காரணமாக நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளி வகுப்புகள் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, யூ-டியூப் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை எழுத இருப்பதால் கடந்த 19-ந் தேதி முதல் நேரடி வகுப்புகள் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. ஆன்லைன் வகுப்புகள் மூலம் அனைத்து பாடங்களையும் முழுவதுமாக நடத்தி முடிக்க முடியாத நிலை இருப்பதால் பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வந்தது.

அந்த வகையில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 50 சதவீதம் வரையிலும், 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 35 சதவீதம் வரையிலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கல்வித்துறை ஏற்கனவே அறிவித்தபடி 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு இருந்ததாக ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் 10, 12-ம் வகுப்பை தொடர்ந்து 9-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடத்திட்டங்களை குறைந்திருப்பதாக கல்வித்துறை நேற்று தெரிவித்திருக்கிறது. குறைக்கப்பட்ட பாடங்கள் எவை எவை என்பது குறித்த விவரங்களை 'பி.டி.எப்.' வடிவில் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி மாணவர்களுக்கு தெரியப்படுத்த அறிவுறுத்தி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து பாடத்திட்டங்களிலும் இருந்து 30 முதல் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டு இருப்பதாக ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments