சென்னை மண்ணடியில்.. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அலுவலகத்துக்கு சீல் வைக்கச்சென்ற அதிகாரிகள்..!



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் சீல் வைக்க வந்ததால் சென்னை மண்ணடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் சென்னை மண்ணடி அரண்மனைக்காரன் தெருவில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதுடன் காவல்துறையினரும் குவிக்கப்பட்டனர்.

காவல்துறைக்கு பதிலடியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரும் பெருமளவில் திரண்டுவிட்டனர்.

சென்னை மண்ணடியில் உள்ள அரண்மனைக்காரன் தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில் ஆன்மிக சொற்பொழிவுகள், தர்ஹா வழிபாடுகளுக்கு எதிரான பிரச்சாரங்கள், உள்ளிட்ட பல செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த அமைப்பில் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான நபர்கள் உறுப்பினர்களாகவும், தன்னார்வலர்களாகவும் இருக்கிறார்கள். இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் எதிரி நாட்டு சொத்து கட்டுப்பாட்டு குழு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அலுவலகத்தை சீல் வைப்பதற்காக மண்ணடிக்கு சென்றது. இதற்கு அந்த அமைப்பின் நிர்வாகிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன் நூற்றுக்கணக்கான நிர்வாகிகளும் அலுவலக வாசல் முன்பு திரண்டனர்.

இதையடுத்து வட்டாட்சியர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் நிகழ்விடத்துக்கு அழைக்கப்பட்டு விளக்கம் கொடுக்கப்பட்டது. இருப்பினும் அலுவலகத்தை சீல் வைக்க விடமாட்டோம் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் உறுதியாக நின்றனர். மேலும், மூன்று மணி நேரத்துக்குள் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து நிர்வாகிகளும், தன்னார்வலர்களும் சென்னை மண்ணடியில் குவியத் தொடங்கினர்.

போலீஸ் தரப்பில் பதிலுக்கு ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இது குறித்த தகவல் அரசு உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்காலிகமாக சீல் வைக்கும் நடவடிக்கையை கைவிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments