கறம்பக்குடியில் மர அறுவை ஆலையில் பயங்கர தீ விபத்து.!கறம்பக்குடியில் மரப்பட்டறையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. பசுமாடு ஒன்று தீயில் கருகி செத்தது.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி புளியஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் முகமது அப்துல்லா (வயது 50). இவருக்கு கறம்பக்குடி அருகே உள்ள நரங்கியப்பட்டில் மரப்பட்டறை உள்ளது. இங்கு விலை உயர்ந்த மரங்கள், மர பலகைகள், போன்றவை அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேலும் இந்த பட்டறைக்கு அருகே கொட்டகை அமைத்து 10-க்கும் மேற்பட்ட மாடுகளும் வளர்க்கப்பட்டு வந்தன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பொங்கல் விழாவையொட்டி தொழிலாளர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் இந்த மரப்பட்டறையில் திடீரென தீப்பிடித்தது. பின்னர், தீ மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவி கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.

இதைக்கண்ட அப்பகுதியில் குடியிருப்பவர்கள் வீட்டை விட்டு அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். தீயின் வெப்பம் தாங்காமல் கொட்டகையில் இருந்த மாடுகள் சத்தமிட்டபடி கயிறுகளை அறுத்துக்கொண்டு வெளியே ஓடின.

இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த கறம்பக்குடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனைத்தொடர்ந்து ஆலங்குடி, புதுக்கோட்டையிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

பின்னர், 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 6 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த பயங்கர தீ விபத்தில் தீயில் சிக்கி பசுமாடு ஒன்று செத்தது. மேலும் பட்டறையில் வைக்கப்பட்டிருந்த மர வகைகள், மர அரவை, இழைப்பு எந்திரங்கள், பலகைகள், மின்சாதனங்கள் என ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பலரது வீடுகள் ஈரமாக இருந்ததால் தீ பரவவில்லை. இல்லையென்றால் பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கும்.

தீ விபத்து குறித்து தகவலறிந்ததும் கறம்பக்குடி தாசில்தார் சேக் அப்துல்லா, துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments