புதுக்கோட்டையில் மின்சாரம் பாய்ந்து அக்கா, தம்பி உயிரிழப்புபுதுக்கோட்டையில் மின்சாரம் பாய்ந்து அக்காள்-தம்பி பலியாகினர். அவர்களை காப்பாற்ற சென்ற தாயும் படுகாயம் அடைந்தார்.

புதுக்கோட்டை அய்யனார்புரம் 3-ம் வீதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் அரசு துறையில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கோப்பெருந்தேவி. இவர்களது மகள் கவிதா (என்கிற) பார்கவி (வயது 23), மகன் தமிழ்செல்வன்(20). கவிதா என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். தமிழரசன் கோவையில் ஒரு கல்லூரியில் பி.பார்ம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். பாஸ்கர் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

இந்நிலையில் அந்த வீட்டில் நேற்று இரவு இரும்பு கம்பிகளை கவிதாவும், தமிழரசனும் சேர்ந்து தூக்கியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக இரும்புக்கம்பி மேலே சென்ற மின்சார வயரில் உரசியது. இதில் அவர்களது உடலில் மின்சாரம் பாய்ந்தது. அவர்கள் அபய குரல் எழுப்பினர்.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு தாய் கோப்பெருந்தேவி விரைந்து வந்து அவர்களை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரது உடலிலும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இந்த சம்பவத்தில் அக்காவும், தம்பியும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்த கணேஷ் நகர் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இறந்தவர்கள் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி பார்ப்போர் நெஞ்சங்களை கனக்க செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments