புதிய நிபந்தனைகள் நிறுத்திவைப்பு: பின்னடைவால் பின்வாங்கும் வாட்ஸ்அப்.!



பயனாளர்கள் பலர் வேறு செயலிகளுக்கு மாறிவருவதால் ஏற்பட்ட பின்னடைவின் காரணமாக, புதிய தனியுரிமைக் கொள்கை தொடர்பான புதிய நிபந்தனைகளை நிறுத்திவைத்தது வாட்ஸ்அப் நிறுவனம்.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் அங்கமான வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில், தனது புதிய தனியுரிமை கொள்கையை வெளியிட்டது. வாட்ஸ்அப் சேவையை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு, ஃபேஸ்புக்குடன் தரவுகளை பகிர்ந்துகொள்ள சம்மதம் தெரிவிக்கவேண்டும் என நிர்பந்திக்கும் வகையில் புதிய கொள்கை இருப்பதாக தகவல்கள் பரவின.

இதையடுத்து ஸ்மார்ட்போன் உபயோகிப்பாளர்கள் வாட்ஸ்அப்க்கு மாற்றான டெலிகிராம், சிக்னல் உள்ளிட்ட செயலிகளுக்கு மாறினர். இதனால் கடந்தவாரம் விளக்கம் ஒன்றை வெளியிட்ட வாட்ஸ்அப் நிறுவனம், தனிநபர்களின் செல்போன் விவரங்கள், இருப்பிட முகவரி உள்ளிட்டவைகள் ஃபேஸ்புக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படாது எனவும், வாட்ஸ்அப் குரூப்புகள் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும் என்றும் கூறியது. பயனாளர்களின் தனிப்பட்ட மெசேஜ், அழைப்பு விவரங்களையும் சேமித்து வைக்க மாட்டோம் என்றும் அந்நிறுவனம் கூறியிருந்தது.

இந்த நிலையில் மீண்டும் விளக்கம் அளித்துள்ள வாட்ஸ்அப் தங்களது புதிய நிபந்தனைகளை நிறுத்திவைப்பதாகவும், பிப்ரவரி 8ஆம் தேதியன்று யாருடைய வாட்ஸ்அப் கணக்கும் முடக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது. வணிக ரீதியிலான வாட்ஸ்அப் நிபந்தனைகளை மே 15 ஆம் தேதி ஒத்திவைப்பதாகவும் கூறியுள்ளது. இதனால் ஃபேஸ்புக் நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் ஜூகர்பர்க் ஃபேஸ்புக் - வாட்ஸ் அப் தகவல் பரிமாற்றம் தொடர்பான தனது கொள்கை மாற்றத்திலிருந்து பின்வாங்கியுள்ளதாக தெரிகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments