புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை உள்பட 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு.! தொல்லியல் துறை கமிஷனர் உதயசந்திரன் தகவல்.!!தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை மேலும் 7 தொல்லியல் அகழாய்வுகள் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தொல்லியல் துறை கமிஷனர் உதயசந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் தொல்லியல்துறை முதன்மைச்செயலாளரும், கமிஷனருமான த.உதயசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பழந்தமிழரின் பெருமையை உலக அரங்கில் நிலைநிறுத்தும் பணியை தமிழக அரசு தொல்லியல்துறை தொடர்ந்து தனிக்கவனம் செலுத்தி செயல்படுத்தி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி மற்றும் அதைச் சுற்றியுள்ள மணலூர், அகரம், கொந்தகை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமணல் ஆகிய இடங்களில் முறையான தொல்லியல் அகழாய்வு பணிகள் முடிக்கப்பட்டு, ஆவணப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2020-21-ம் ஆண்டில் தமிழக அரசு தொல்லியல் துறையின் மூலம் சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், சிவகளை, அதைச் சுற்றியுள்ள பகுதிகள், கொற்கை, அதைச் சுற்றியுள்ள பகுதிகள், ஈரோடு மாவட்டம் கொடுமணல், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம், மாளிகைமேடு ஆகிய 7 தொல்லியல் அகழாய்வுகள், புதிய கற்கால இடங்களைக் கண்டறிய கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் முறையான தொல்லியல் கள ஆய்வு மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்தைக் கண்டறிய திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தொல்லியல் களஆய்வு என 2 தொல்லியல் களஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அதற்காக, மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக்குழுவின் ஒப்புதலுக்காக தமிழக அரசு பரிந்துரையின் பெயரில் கடந்த ஜூலை மாதம் உரிய முன்மொழிவுகள் அனுப்பப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

தொல்லியல் கள ஆய்வுகள் மற்றும் அகழாய்வுகள் மேற்கொள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள், துறைகள், முகமைகளிடம் இருந்து திட்ட கருத்துருக்கள் பெறப்பட்டு, தமிழக அரசு பரிந்துரையின் பெயரில் மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அதில் சென்னையில் உள்ள சர்மா மரபுசார் கல்வி மையத்தின் மூலம் திருவள்ளூர் மாவட்டம் சென்றாயன்பாளையம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தால் சிவகங்கை மாவட்டம் இலந்தக்கரை, தமிழ் பல்கலைக்கழகத்தால் கோவை மாவட்டம் மூலப்பாளையம், சென்னை பல்கலைக்கழகத்தால் வேலூர் மாவட்டம் வசலை மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தால் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை ஆகிய இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ள அனுப்பிவைக்கப்பட்டுள்ள முன்மொழிகள், மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளன.

இந்த கருத்துருக்களுக்கு ஒப்புதல் பெற்றால், 2020-21-ம் ஆண்டில் தமிழகத்தில் முதல் முறையாக சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வரலாற்று மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தொல்லியல் நெறிமுறைகளின்படி அகழாய்வுகள் மற்றும் விரிவான தொல்லியல்சார் களஆய்வுகள் மேற்கொள்ளப்படும். தற்போது மேற்கொள்ளப்பட உள்ள அகழாய்வுகள் மற்றும் களஆய்வுகள், பண்டைய தமிழக பண்பாட்டு பெருமையை மீட்டெடுக்கும் நீண்ட அறிவியல் சார்ந்த செயல்பாட்டின் முக்கிய படிக்கல் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments