காரைக்குடி-தூத்துக்குடி புதிய ரயில் பாதை அறிவிப்பு தென்மாவட்ட மக்கள், வர்த்தகர்கள் வரவேற்பு
மத்திய பட்ஜெட்டில் காரைக்குடி யில் இருந்து தூத்துக்குடிக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு தென்மாவட்ட மக்கள், வர்த்தகர் கள் வரவேற்பு தெரிவித்தனர்.

கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை, எர்ணாகுளம், கோழிக்கோடு, மங்களூரு வழியாக மும்பை வரை 1,922 கி.மீ.க்கு மேற்கு கடற்கரை ரயில்பாதை உள்ளது. இந்த ரயில் பாதையால் கேரளம், கர்நாடகம், கோவா, மகாராஷ்டிரா மாநிலங்கள் பயன்பெறுகின்றன.
மேற்குக் கடற்கரையில் உள்ள அனைத்து துறைமுகங்களையும் இந்த வழித்தடம் இணைப்பதால் சரக்குகளை எடுத்துச் செல்வது சுலபமாக உள்து. இதனால் இப்பகுதிகள் பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளன. இதுபோல் கிழக்குக் கடற்கரைப் பகுதியிலும் ரயில் வழித்தடம் அமைக்க வேண்டுமென நீண்டநாள் கோரிக்கை உள்ளது.

கூடங்குளம் அணு மின் நிலையம், நாங்குனேரி தொழில்நுட்பப் பூங்கா, மகேந்திரகிரி ஐஎஸ்ஆர்ஓ திரவ இயக்கத் திட்ட மையம் மற்றும் தூத்துக்குடி, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, சென்னை எண்ணூர் உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து சரக்குகள் பெரும்பாலும் சாலை வழியாகவே அனுப்பப்படுகின்றன.

கிழக்குக் கடற்கரை ரயில் பாதை அமைந்தால் சரக்குப் போக்குவரத்து அதிகரிப்பதோடு, புதிய தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் உருவாகவும் வாய்ப்புள்ளது.

கிழக்குக் கடற்கரை ரயில் பாதை கன்னியாகுமரியில் தொடங்கி திருச்செந்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், காரைக்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, மகாபலிபுரம் வழியாக சென்னை வரை செல்கிறது.

இந்த வழித்தடத்தில் ஏற்கெனவே கடலூரில் இருந்து காரைக்குடி வரை ரயில் பாதை உள்ளது. இதையடுத்து சென்னையில் இருந்து மகாபலிபுரம், புதுச்சேரி வழியாக கடலூர் வரை 178.28 கி.மீ.க்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என 2008-2009-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.523.52 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் திட்டம் செயல்படுத்தவில்லை.

அதேபோல் கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், காரைக்குடி வரை புதிய ரயில் பாதைக்கு ஆய்வு நடத்தப்படும் என அதே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி 214.81 கி.மீ.-க்கு காரைக்குடியில் இருந்து தூத்துக்குடி வரையும், 247.66 கி.மீ.-க்கு தூத்துக்குடியில் இருந்து கூடங்குளம் வரைக்கும் ரூ.1,080 கோடியில் ரயில் தடம் அமைக்க திட்டமிடப்பட்டது. தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு ரயில்வே துறையிடம் அறிக்கை அளிக்கப்பட்டது.

ஆனால், 11 ஆண்டுகளாக செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் மத்திய பட்ஜெட்டில் சென்னையில் இருந்து மகாபலிபுரம் வழியாக கடலூர் வரை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பணி தொடங்கும். மேலும் காரைக்குடி-தூத்துக்குடி புதிய ரயில் பாதை அமைக்கப்படும். இத் திட்டப் பணிக்கு முதற்கட்டமாக ரூ.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவர் சாமிதிராவிடமணி கூறுகையில், ‘இந்த பட்ஜெட்டில் காரைக்குடி- தூத்துக்குடி ரயில் பாதை அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அதே சமயத்தில் அறிவிப்போடு நிற்காமல் திட்டப்பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும். அதேபோல் தூத்துக்குடியில் இருந்து கூடங்குளம் வரையிலும் ரயில் பாதை பணி தொடங்கப்பட உள்ளது,’ என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments