இந்தியாவின் இளம் பெண் விமானி... சாதித்த காஷ்மீரின் ஆயிஷா அஜீஸ்!




காஷ்மீரைச் சேர்ந்த ஆயிஷா அஜீஸ், இந்தியாவின் இளம் பெண் விமானி என்ற சிறப்பை பெற்றுள்ளார். அவர் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

 
காஷ்மீரைச் சேர்ந்த 25 வயதான ஆயிஷா அஜீஸ் என்ற பெண் இந்தியாவின் இளம் பெண் விமானி என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். சிறுவயதில் இருந்தே விமானத்தின் மீது ஆர்வம் கொண்டு அதற்காக தயார்படுத்தி கொண்டு வந்துள்ளார் ஆயிஷா 2011 ஆம் ஆண்டே தனது 15 வயதில் உரிமம் பெற்ற இளைய மாணவர் விமானி ஆனார்.

அடுத்த ஆண்டு ரஷ்யாவின் சோகோல் விமான நிலையத்தில் ஒரு எம்ஐஜி-29 ஜெட் விமானத்தை பறக்க பயிற்சி பெற்றார். 2017-ஆம் ஆண்டில், ஆயிஷா அஜீஸ் மும்பை பறக்கும் கிளப்பில் (பிஎஃப்சி) விமானப் போக்குவரத்து பட்டம் பெற்றதோடு வணிக விமானங்களை இயக்கும் லைசென்ஸையும் பெற்றார்.

இளம் பெண் விமானி ஆகி இருப்பது குறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ``நான் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தேன், ஏனென்றால் நான் சிறுவயதிலிருந்தே பயணிப்பதை நேசித்தேன், பறப்பதில் மிகவும் ஈர்க்கப்பட்டேன். இந்தப் பணியில் ஒருவர் பலரைச் சந்திக்கிறார். இதனால்தான் நான் ஒரு பைலட்டாக இருக்க விரும்பினேன். சாதாரண 9 - 5 மேசை வேலை (Desk job) போன்று இல்லாமல் இந்தப் பணி மிகவும் சவாலானது. புதிய இடங்களையும், பல்வேறு வகையான வானிலைகளையும் எதிர்கொள்ளவும், புதிய நபர்களைச் சந்திக்கவும் நான் தொடர்ந்து தயாராக இருக்க வேண்டும்.

இந்தத் துறையில், ஒருவரின் மனநிலை மிகவும் வலுவாக இருக்க வேண்டும். ஏனெனில், நீங்கள் 200 பயணிகளை ஏற்றிச் செல்வீர்கள், அது ஒரு பெரிய பொறுப்பு. இந்த நிலையை எட்டியதற்கு நான் எனது பெற்றோருக்கு கடமைப்பட்டிருக்கிறேன். எனது தந்தை தான் எனது ரோல் மாடல். எல்லாவற்றிலும் எனக்கு ஆதரவளித்த பெற்றோர்கள் எனக்கு கிடைத்திருப்பது மிகவும் அதிர்ஷ்டசாலி.


அவர்கள் இல்லாமல், நான் இன்று இருக்கும் இடத்திற்கு என்னால் சென்றிருக்க முடியாது" என்ற ஆயிஷா அஜீஸ், காஷ்மீரி பெண்களின் கல்வி குறித்தும் பேசி இருக்கிறார். அதில், ``காஷ்மீர் பெண்கள் மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் கல்வித்துறையில் முன்னேறியுள்ளனர். காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் தனது முதுநிலை அல்லது முனைவர் பட்டம் பெறுகிறார்கள்" என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments