மாரடைப்புக்கும் நெஞ்சுவலிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? - மருத்துவர் விளக்கம்
சிலருக்கு நெஞ்சுவலித்தாலே தனக்கு மாரடைப்பு வந்துவிட்டதாக பயந்து மருத்துவரிடம் செல்கிறார்கள். ஆனால் அது சாதாரண வலிதான் என்று பரிசோதிக்கும் மருத்துவர்கள் கூறி அனுப்பிவிடுகிறார்கள். மாரடைப்புக்கும், சாதாரண நெஞ்சுவலிக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன? மாரடைப்பின் அறிகுறிகள் என்னென்ன? காரணிகள் என்னென்ன? என்பதை விளக்குகிறார் மதுரை மருத்துவ கல்லூரியின் கார்டியாலஜி பேராசிரியரும், இதய நிபுணருமான செல்வராணி.

மாரடைப்பு என்றால் என்ன?
ஒவ்வொரு மனிதனுக்கும் உடல் வயது மற்றும் வாஸ்குலார் வயது என்ற இரண்டு இருக்கிறது. அதாவது ஒரு மனிதனின் ரத்தக்குழாய்களில் கொழுப்பு அடைக்கும்போது(அக்ரோஸ் க்ளீரோஸிஸ்) அது இதயத்தின் வயதை அதிகரிக்கிறது. அதாவது வாழ்நாளைக் குறைக்கிறது என்றும் சொல்லலாம். அக்ரோமேடஸ் ப்ளாக் என்பது ரத்தக்குழாய்களின் உள்ளே விதை போன்று சிறிய வீக்கம் உருவாகும். இது மாரடைப்பு வருவதற்கான முக்கிய காரணி.

காரணங்கள்
அதுமட்டுமல்லாமல் மாரடைப்பு வர காரணமாக 9 காரணிகளைக் குறிப்பிடலாம். சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, உடல் பருமன், நல்ல கொழுப்பு குறைவாகவும் கெட்ட கொழுப்பு அதிமாகவும் இருத்தல்(டிஸ்டிபீடியா), புகைப்பிடித்தல், தீவிர குடிப்பழக்கம், உடலுழைப்பு குறைவாக இருத்தல், மன அழுத்தம், தவறான உணவுப்பழக்கம் ஆகியவை.

பிஸியான வாழ்க்கைமுறைகளால் இந்த 9 காரணிகளுமே இன்றைய தலைமுறையினரிடம் பெரும்பாலும் காணப்படுகிறது. படிக்கும் வயதிலேயே பெரும்பாலானோர் படிப்பு சுமையால் மன அழுத்தம், குடி மற்றும் போதைப்பழக்கத்திற்கு அடிமையாதல் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால்தான் வயது வரம்பே இல்லாமல் 25 வயதினருக்கே இதய நாளங்கள் முதிர்ச்சியடைந்து வயதானவர்களைப் போன்று இதய பிரச்னைகள் ஏற்படுகிறது.

எனவே இதுபோன்ற பிரச்னைகளை சந்திப்பவர்கள் உணவு பழக்கங்களை மாற்றுதல், உடற்பருமனில் கவனம் செலுத்துதல், உடற்பயிற்சி செய்தல், வெளியே நண்பர்களுடன் சென்று நேரம் செலவிடுதல் போன்றவற்றில் கவனத்தை திருப்பி வாழ்க்கைமுறையை மாற்றியமைக்கவேண்டும். இதனால் மாரடைப்பு வருவதைத் தடுக்கலாம். ஆனால் சிலருக்கு அதையும்மீறி மரபணு பிரச்னைகளால்கூட மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புள்ளது. அதாவது ரத்த சம்பந்தமான உறவுமுறையினருக்கு மாரடைப்பு வந்திருக்கும் பட்சத்தில் அடுத்த தலைமுறையினருக்கும் வரும் வாய்ப்புகள் அதிகம்.

முன்பெல்லாம் 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும், 55 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும்தான் மாரடைப்பு வரும். இதுவும் மாரடைப்பு வருவதற்கு ஓர் முக்கிய காரணியாக கருதப்படுகிறது.

மாரடைப்பின் அறிகுறிகள்

சிலருக்கு மாரடைப்புக்கும், நெஞ்சுவலிக்கும் வித்தியாசம் தெரியாது. மார்புபகுதியில் சதை, எலும்பு, நுரையீரல் மற்றும் அதை சுற்றியுள்ள சவ்வான புளூரா, இதயம் மற்றும் அதை சுற்றியுள்ள சவ்வான பெரிகார்டியம், ரத்தக்குழாய்கள் போன்ற பல உறுப்புகள் உள்ளன. இதில் எந்த உறுப்பில் பாதிப்பு என்றாலும் நெஞ்சு வலி ஏற்படும்.. அதை மாரடைப்பு என்று சொல்லிவிட முடியாது. மாரடைப்பு ஏற்படும்போது மார்பின் நடுப்பகுதியில் தாங்கமுடியாத, அதாவது ஒரு யானை ஏறி அமர்ந்தது போன்ற வலி இருக்கும். மூச்சுத்திணறல் ஏற்படும். நல்ல ஓய்வு நாக்குக்கடியில் நைட்ரேட்ஸ் போன்ற மாத்திரைகளை வைக்கும்போது வலிகுறைவதும், டென்ஷன் ஆகும்போதும், உடற்பயிற்சி செய்யும்போது மீண்டும் வலி அதிமாவதும் மாரடைப்புக்கான ஓர் அறிகுறி. இதுமட்டுமல்லாமல் வலது அல்லது இடது பக்கவாட்டில் தொடர்ந்துவலி, மார்பு எலும்புக்கு உள்ளே வலி, மூச்சு நின்றுவிடுவதைப் போன்ற உணர்வு, இறந்துவிடுவோம் என்ற எண்ணம், மணிக்கட்டை நன்றாக சுழற்றமுடியாமை போன்றவைகளும் மாரடைப்பின் அறிகுறிகள். இதுமட்டுமல்லாமல் சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமலுகூட மாரடைப்பு வரலாம். சிலருக்கு அசாதாரணமான அறிகுறிகளான ஏப்பம், மயக்கம், அடிக்கடி சுயநினைவிழத்தல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

ஒருவிரலை வைத்து காண்பித்தால் மாரடைப்பு அல்ல; அதேசமயம் முழு கையையும் மார்பில் வைத்து காண்பிக்கும்போது 90% அது மாரடைப்பாகத்தான் இருக்கும் என்பதை மருத்துவர்கள் கணிக்கின்றனர்.

மாரடைப்பின் மற்ற காரணிகள்

சமீபத்தில் விளையாட்டு வீரர் கங்குலிக்கு மாரடைப்பு வந்தது குறிப்பிடத்தக்கது. நன்றாக உடற்பயிற்சி செய்து விளையாட்டுகளில் ஈடுபட்டால் மாரடைப்பு வராது என பலரும் தவறான பிரிதலுடன் இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு விளையாட்டிலேயே இருக்கும் அழுத்தம் மற்றும் வெளிப்புற அழுத்தம் போன்றவை ரத்தக்குழாய்களின் உள்ளே இருக்கும் ஒரு லேயரில் அழுத்தத்தைக் கொடுத்து மாரடைப்புக்கு காரணமாக அமையும். ‘ஆட்டோ இம்யூன்’ நோய்கள் என்று சொல்லக்கூடிய மற்ற ரத்தநாள நோய்கள் உள்ளவர்கள், ஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொள்பவர்களுக்கும் இதயத்தின் வாஸ்குலார் வயது என்பது குறைந்துவிடும். இவர்களுக்கு மாரடைப்பு எளிதாக வரும் வாய்ப்புகள் அதிகம்.

ரத்தக்குழாய்கள் மட்டுமல்லாமல் ரத்தத்தின் அடர்த்தியை பொருத்தும் மாரடைப்பு வரலாம். ரத்தத்தின் உறையும்தன்மை அதிகமாக இருக்கக்கூடிய, புரதம்,வைட்டமின் குறைபாட்டு நோய்களும் மாரடைப்பு காரணமாகலாம். உதாரணமாக ரத்த சிவப்பணு புற்றுநோய் இருப்பவருக்கு மாரடைப்பு வருவதைப் போன்றே வலி ஏற்படலாம். ஆனால் அது மாரடைப்பு இல்லை என்பதை பரிசோதனையின்மூலம் மட்டுமே கண்டறியமுடியும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments