அறந்தாங்கி காவிரி பாசன பகுதியில் நெற்கதிர்கள் அறுவடை தீவிரம்




அறந்தாங்கி காவிரி பாசன பகுதியில் கதிர் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் இயந்திரத்திற்கான கூலியை கொடுக்கக்கூட மகசூல் கிடைக்காததால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் காவிரி நீர் பாசனம் நடைபெறும் பகுதிகளாகும். இப்பகுதியில் இந்தாண்டு போதுமான தண்ணீர் வந்ததால் விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி பகுதியை தொடங்கினர். நெல் சாகுபடி செய்த பயிர்களில் குலைநோய், நெல்பழம் நோய் போன்ற நோய்களின் தாக்குதலில் பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் கூடுதலாக பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து பயிர்களை காப்பாற்றினர். கதிர் முற்றி அறுவடைக்கு தயாரான நிலையில் கடந்த ஜனவரி மாதம் பெய்த பருவம் தப்பிய மழை காரணமாக இப்பகுதியில் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கின. தண்ணீரில் மூழ்கிய நெல் முளைத்து விவசாயிகளுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படடது. இந்நிலையில் வயலில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்த பின்பு எஞ்சியிருந்த நெற்கதிர்களை இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்து வருகின்றனர்.

காவிரி பாசன பகுதிகளில் அறுவடை செய்யும் நெற்பயிரில் வழக்கமாக இருப்பதை விட சுமார் 50 முதல் 980 சதவீத மகசூல் குறைவாகவே கிடைத்து வருகிறது. கடந்த ஆண்டைவிட பல மடங்கு குறைவாக மகசூல் கிடைத்து வருவதால் கதிர் அறுவடை இயந்திர கூலி, நெல் கொண்டு செல்லும் டிராக்டர் வாடகைக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. இதனால் விவசாயிகள் பெரியளவில் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து காவிரிப்பாசன விவசாயி ஒருவர் கூறியதாவது: காவிரி பாசன விவசாயம் வழக்கமாக தண்ணீர் பற்றாக்குறையால் தான் பாதிக்கப்படும். ஆனால் இந்தாண்டு போதுமான தண்ணீர் இருந்தும் குலைநோய், நெற்பழம் நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து கதிர் அறுவடை நேரத்தில் பெய்த மழையால் இருந்த கொஞ்ச நஞ்ச மகசூலும் பாதிக்கப்பட்டது. தற்போது வயலில் தங்கிய தண்ணீர் வடிந்த பின் இயந்திரம் மூலம் கதிர் அறுவடை பணிகளை மேற்கொண்டோம்.

ஆனால் நோய் தாக்குதல், மழையால் பாதிப்பு போக எஞ்சிய நெல்லை அறுவடை செய்தபோது கிடைத்த மகசூல் அறுவடை இயந்திர கூலிக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. இந்தாண்டு சாகுபடிக்காக நாங்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகைக்கடன் வாங்கியுள்ளோம். இந்தாண்டு போதுமான மகசூல் கிடைக்காததால் நாங்கள் நகைகளை திருப்ப முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே தமிழக அரசு, கூட்டுறவு சங்க கடன்களை தள்ளுபடி செய்ததுபோல வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்தால் மட்டுமே இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க முடியும் என்றார். பல்வேறு காரணங்கால் இந்தாண்டு காவிரி பாசன விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு, வங்கிகளில் விவசாயிகள் சாகுபடிக்காக பெற்றுள்ள நகை கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments