புதுக்கோட்டை பகுதியில் போதை ஊசி விற்ற 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது



போதை ஊசி விற்ற 2 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டார்.

புதுக்கோட்டை நகரப்பகுதியில் சமீபகாலமாக போதை ஊசி விற்பனை அதிகரித்துள்ளது. போதை தரக்கூடிய மாத்திரைகளை மருந்து கடைகளில் வாங்கி, அதனை பொடியாக்கி, தண்ணீரில் கலந்து ஊசி மூலம் உடலில் நரம்பில் செலுத்துவது உண்டு.

இந்த போதை ஊசிகளை குறிப்பிட்ட விலையில் விற்று வருகின்றனர். இந்த போதைக்கு சிலர் அடிமையாக உள்ளனர். இதனால் இதன் விற்பனை தற்போது அதிகரிக்க தொடங்கிய நிலையில் இதனை தடுக்க போலீசார் ஆங்காங்கே உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி புதுக்கோட்டை சந்தைபேட்டையில் போதை ஊசி மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்த திருவேங்கை வாசலை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 22), மேல 5-ம் வீதியை சேர்ந்த நவீன் (22) ஆகிய 2 பேரையும் டவுன் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் கைதான 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உமாமகேஸ்வரிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்படி 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். 

இதைத்தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி, நவீன் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து 2 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். போதை ஊசி மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்வது தெரிந்தால் உடனடியாக மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம். 

போதை ஊசி மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments