புதுக்கோட்டை: மாவட்ட நிர்வாகப் பெருந்திட்ட வளாகம் அமைக்கப்படுமா?




புதுக்கோட்டை மாவட்டத்தின் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மாவட்டத்தின் தலைமையிடமாக உள்ள மையத் தொகுதி புதுக்கோட்டை.

புதுக்கோட்டை நகராட்சியின் 42 வார்டுகள், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் 28 வருவாய் கிராமங்கள் ஆகியவற்றுடன் ஆலங்குடி வட்டத்தைச் சேர்ந்த சுமார் 12 வருவாய் கிராமங்கள் இத்தொகுதியில் இடம்பெறுகின்றன.

பெரிய அளவிலான தொழிற்சாலைகள் எதுவுமில்லை. சுற்றுலாத் தலங்கள் மிகுந்த மாவட்டம் என்றாலும், இந்தத் தொகுதிக்கு உள்ளே குறிப்பிடத்தக்கதாக எதுவுமில்லை.

தொகுதியின் மொத்த வாக்காளர்கள்- 2,43,229 பேர். இவர்களில் 1,18,944 பேர் ஆண்கள், 1,24,263 பேர் பெண்கள், 22 பேர் திருநங்கைகள்.

தொகுதியின் மொத்த வாக்காளர்களில் சரிபாதிப் பேரைக் கொண்டிருக்கிறது புதுக்கோட்டை நகராட்சி.

தொண்டைமான் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்ட நகரமைப்பு என்று சொல்லப்பட்டாலும் இப்போதைய நிலவரம் திருப்திகரமாக இல்லை என்பதுதான் சமூக ஆர்வலர்களின் பார்வை.

எல்லா நகரங்களுக்குமே பொதுவான பிரச்னைகளாக உள்ள திடக்கழிவு மேலாண்மை, புதை சாக்கடைத் திட்டச் செயலாக்கத்தில் உள்ள குறைகள், பழுதடைந்த சாலைகள், பராமரிப்பில்லாத பேருந்து நிலையம், ஓரிரு பகுதிகளுக்கு குடிநீர் இணைப்பு இல்லை என குற்றச்சாட்டுகளுக்குப் பஞ்சமில்லை. 

மாநிலத்தின் இரண்டாவது பெரிய அருங்காட்சியகம் இந்தத் தொகுதிக்குள் இருந்தாலும், அந்தப் பெயருக்கேற்ற விசாலமான கட்டடம் இல்லை. நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு பிரதான காரணமாக உள்ள கருவப்பில்லான் ரயில்வே கேட், திருவப்பூர் ரயில்வே கேட் ஆகியனவற்றில் மேம்பாலம் கட்டும் திட்டம் இன்னமும் ஆய்வு நிலையிலேயே உள்ளன.

இன்னும் சில ஆண்டுகளில் எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கப்பட வேண்டிய புதிய அரண்மனை வளாகம் (மாவட்ட ஆட்சியர் அலுவலகம்), பொது அலுவலகம் வளாகம் (நீதிமன்றம், பதிவுத்துறை) ஆகியவற்றில் உள்ள அரசு அலுவலகங்களை வெளியே கொண்டு செல்லும் வகையில் 'மாவட்ட நிர்வாகப் பெருந்திட்ட வளாக'த்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏன் யாருமே இதுவரை முன்வைக்கவில்லை என்றும் தெரியவில்லை. அரசு நிர்வாகத் தரப்பிலும் இதுபோன்ற எந்த முன்வைப்பும் இல்லாதது ஏன் என்றும் தெரியவில்லை,எல்லா மாவட்டங்களிலும் இதுபோன்ற அரசு அலுவலக வளாகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

புதிய பெருந்திட்ட வளாகம் அமைக்கப்பட்டால், எல்லா அரசு அலுவலகங்களும் அங்கே சென்றுவிடும் என்பதோடு மட்டுமல்ல, பழமையான கட்டடங்கள் சில பத்தாண்டுகளுக்குப் பிறகு அடுத்த தலைமுறைக்கு காட்டுவதற்காக பாதுகாக்கப்படும்- பாதுகாக்கப்பட வேண்டும் என்பது பிரதான விஷயம். இவையெல்லாம் மாவட்டத்தின் அடையாளமாகவும் முகமாகவும் உள்ளன.

இப்படிப்பட்ட சூழலில்தான் புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலைச் சந்திக்கிறது. மொத்தத் தொகுதியில் கள்ளர், அகமுடையார்,  முத்தரையர், இஸ்லாமியர்கள், தலித்துகள் ஆகியோர் கணிசமாக உள்ளனர். இவர்களைத் தவிர, நகரத்தார், வெள்ளாளர், நாடார் சமூகத்தினரும் இத்தொகுதிக்குள் வசிக்கின்றனர்.

தற்போதைய திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பெரியண்ணன் அரசு, 2016 தேர்தலில் பெற்ற வாக்குகள்- 66,739. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் பெற்ற வாக்குகள்- 64,655.

பெரியண்ணன் அரசு ஏற்கெனவே நடைபெற்ற 2001 மற்றும் 2011 தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை இழந்தவர். அரசுவின் தந்தை பெரியண்ணன் இதே தொகுதியில் கடந்த 1989 மற்றும் 1996 ஆகிய இரு தேர்தல்களில் வென்றவர். மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்பை எதிர்பார்த்திருக்கிறார் பெரியண்ணன் அரசு. திமுக நகரச் செயலர் க. நைனாமுகமது, மருத்துவ அணிச் செயலர் டாக்டர் முத்துராஜா உள்ளிட்டோரும் பட்டியலில் உள்ளனர்.

திமுக அணியில் காங்கிரஸ் கட்சிக்கோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கோ இந்தத தொகுதி ஒதுக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. தீரர் சத்தியமூர்த்தி 1971இல் இத்தொகுதியில் வென்றுள்ளார். அவரைத் தொடர்ந்து 1984-ல் ஜெ. முகமது கனி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மாவட்டச் செயலர் எஸ்.பி. முத்துக்குமரன் கடந்த 2011இல் வென்றுள்ளார். இவருக்கு முன்பாக 1971, 1980, 1984 ஆகிய தேர்தல்களில் இக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட கே.ஆர். சுப்பையா வெற்றி வாய்ப்பை இழந்தவர்.

அதிமுகவில் ராஜ்குமார் விஜயரகுநாத தொண்டைமானின் மகனும், முன்னாள் எம்எல்ஏவுமான கார்த்திக் தொண்டைமானுக்கு இம்முறை போட்டியிட மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள் அதிமுகவினர். இதற்கு அச்சாரமாக உள்ளூர் அரசியலில் முரண்பட்ட நிலையில் இருந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், மாவட்டச் செயலருமான சி. விஜயபாஸ்கருடன் அண்மையில் உடன்பாடு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மன்னர் பரம்பரையைச் சேர்ந்த இவர் ஏற்கெனவே இத்தொகுதியில் கடந்த 2012-இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் வென்றவர். இவருக்கு முன்பாக மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ராஜ்குமார் விஜயரகுநாத தொண்டைமான் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 1967, 1977, 1980 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வென்றுள்ளார்.

அதிமுக அணியில் இத்தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டால், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் கே.ஜி. ஆனந்த்துக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கப் பெறலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments