தமிழகத்தில் பேருந்து வேலைநிறுத்தம்: மிகக்குறைவான பேருந்துகள் இயக்கம் -பயணிகள் அவதி





தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதில் காலி பணியிடம், பணி நிரந்தரம், தொழிலாளர்கள் நிலுவைத் தொகை வழங்குவது உள்ளிட்டவை பேசி ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவது வழக்கம். ஆனால் இவை முறையாக நடைபெறுவதில்லை என்பது போக்குவரத்து தொழிற்சங்கங்களின் குற்றச்சாட்டு. 14ஆவது ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற பணியாளர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி தொ.மு.ச , சி.ஐ.டி.யூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன. அதன்படி இன்று பேருந்து வேலைநிறுத்தம் தொடங்கியது.

எதிர்க்கட்சியை சேர்ந்த தொழிற்சங்கங்கள் போராட்டம் நடைபெறுவது உறுதி என கூறியுள்ள நிலையில் அண்ணா தொழிற்சங்கம் இதில் பங்கேற்கபோவதில்லை என அறிவித்துள்ளது. தமிழக அரசு ஏற்கெனவே 2 கட்ட பேச்சுவார்த்தையை முடித்திருப்பதாகவும் பேருந்து சேவை இயக்கத்தில் பாதிப்பு இருக்காது எனவும் அண்ணா தொழிற்சங்கத்தினர் கூறுகின்றனர்.

இந்த நிலையில், வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு பணிக்கு வராதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் எச்சரித்துள்ளது. ஆனால் திட்டமிட்டப்படி போராட்டம் நடக்கும் என தொமுச அறிவித்துள்ளது. அதேவேளையில் போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரும் கண்டிப்பாக பணிக்கு வருமாறும், அன்றைய தினங்களில் விடுப்புகள் ஏதும் அனுமதிக்கப்படாது என்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கூறியுள்ளது. இதற்கிடையே அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக, ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தொழிலாளர்கள் போராட்டத்தை விட்டுவிட்டு பணிக்கு செல்லுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments