புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சித்த மருந்து தயாரிப்பு நிலையம்
புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் டாம்ப்கால் மருந்து தயாரிக்கும் நிலையம்-2 திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை, டாம்ப்கால் இயக்குனர் கணேஷ் முன்னிலை வகித்தார். டாம்ப்கால் மருந்து தயாரிக்கும் நிலையம்-2-ஐ மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்து பேசியதாவது:-


இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் டாம்ப்கால் மருந்து தயாரிக்கும் நிலையம் சென்னை ஆலந்தூரில் செயல்பட்டு வருகிறது. சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா, நேச்சுரபதி ஆகிய பிரிவுகளுக்கு தேவையான மருந்துகள் இங்கு தயார் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு சித்த மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இரண்டாவதாக டாம்ப்கால் மருந்து தயாரிக்கும் நிலையம்-2 புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.  இங்கு நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர், சூரணம், லேகியம், தைலம், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா, நேச்சுரபதி ஆகிய பிரிவுகளுக்கு தேவையான மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு மருந்துகள் தயார் செய்யப்பட்டு தென் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு இங்கிருந்து நேரடியாக அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இதன் பயனாக சென்னை டாம்ப்கால் செல்வது தவிர்க்கப்பட்டு தென் மாவட்டங்களுக்கு புதுக்கோட்டையில் இருந்து மருந்துகளை விரைவாக அனுப்ப முடியும். இதனால், நேரம் மிச்சமாகும். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக இரண்டாவதாக உருவாக்கப்பட்டுள்ள டாம்ப்கால் மூலம் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும். மேலும் கொரோனா தொற்றின்போது புதுக்கோட்டையில் அமைக்கப்பட்ட கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தின் மூலம் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் சென்னை டாம்ப்கால் பொது மேலாளர் அங்கையற்கன்னி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் உம்மல் கதீஜா, டாம்ப்கால் சிறப்பு அலுவலர் டாக்டர் மோகன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் த.ஜெயலெட்சுமி, மாவட்ட வேளாண் விற்பனைக்குழுத் தலைவர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments