சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிப்பு: 12 நாட்களில் 2-வது முறையாக உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி- ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ நெருங்குகிறது



வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு (காஸ்) சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. 12 நாட்களில் இரண் டாவது முறையாக சிலிண்டர் விலை உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, பெட்ரோல் விலையும் லிட்டர் ரூ.100-ஐ நெருங்குகிறது.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் மாற்றி அமைத்து வந்தன. கடந்த டிசம்பர் மாதம் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த, 4-ம் தேதி சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட்டது. இந்நிலையில், 2-வது முறையாக நேற்று மீண்டும் ரூ.50 உயர்த்தப் பட்டு உள்ளது. தற்போது சிலிண்டர் விலை ரூ.735-ல் இருந்து ரூ.785 ஆக அதிகரித்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் வீட்டு உப யோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மும்பையில் ரூ.829.50, டெல்லியில் ரூ.858.50, சென்னையில் ரூ.881, கொல் கத்தாவில் ரூ.896 என விலை நிர்ண யிக்கப்பட்டு இருந்தது. இது, 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு உயர்ந்த அதிகபட்ச அளவாகும்.

உலகையே அச்சுறுத்திய கரோனா வைரஸ் பரவல் காரணமாக, அனைத்து நாடுகளும் கடந்த ஆண்டு மார்ச் மாதத் தில் பொதுமுடக்கத்தை அறிவிக்கத் தொடங்கின. இந்தியாவில் ஊரடங்கு காரணமாக பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைந்து வந்தது. கடந்த ஆண்டு மே மாதம் சென்னையில் சிலிண்டர் விலை ரூ.569.50 ஆக சரிந்தது. பின்னர் ஜூலையில் ரூ.610.50 ஆக உயர்ந்து, அதே விலையில் அக்டோபர் வரை நீடித்தது.

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு இயல்பு நிலைக்கு திரும்பியதால், எரிவாயு சிலிண் டரின் விலையும் படிப்படியாக உயர்ந்து வந்தது. இந்த மாதத்தில் 2 முறையாக ரூ.75 உயர்த்தப்பட்டதால் தற்போது சிலிண்டர் விலை ரூ.785-ஐ எட்டியுள்ளது. 12 நாட்களில் இரண்டாவது முறையாக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந் துள்ளனர். இந்த விலை உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை இம்மாத தொடக்கத்தில் ரூ.1,649 ஆக உயர்த்தப் பட்டது. தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால், வணிக சிலிண்டர் விலையும் உயருமோ என்று உணவகங்கள், இனிப்பு மற்றும் காரவகை தயாரிப்பு நிறுவனத்தினர், தேநீர் கடை வைத்திருப்போர், சாலை யோர உணவகம் நடத்துவோர் அச்சம் அடைந்துள்ளனர்.

பெட்ரோல், டீசல்

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப் படையில், இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. அத் துடன் மத்திய, மாநில அரசுகள் ஏற்கெனவே சில்லறை விற்பனையில் பெட்ரோலுக்கு 61 சதவீத வரியும், டீசலுக்கு 56 சதவீத வரியும் விதித்து வசூலித்து வருகின்றன. இதன் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மட்டுமல்லாது, பெட்ரோல், டீசல் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இது, வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள் ளிட்ட மாநிலங்களில் பல்வேறு நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. நேற்றைய நிலவரப்படி (பிப்.15) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் நகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.26-க்கு விற்கப்பட்டது. மத்திய பிரதேச மாநிலம் சித்தி, கண்ட்வா, ராய்சென், சத்னா, சட்டர்பூர் உள்ளிட்ட 28 நகரங்களில் ரூ.98-க்கு மேல் உயர்ந்து உள்ளது. அதிகபட்சமாக ராய்சென் நகரத் தில் ரூ.98.63-க்கு விற்கப்பட்டது.

டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.88.99, கொல்கத்தாவில் ரூ.90.25, சென்னையில் ரூ.91.19, பெங்களூருவில் ரூ.91.97, மும்பையில் ரூ.95.46 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டீசல் விலை டெல்லியில் லிட்டருக்கு ரூ.79.35, கொல்கத்தாவில் ரூ.82.94, சென்னையில் ரூ.84.44, பெங்களூருவில் ரூ.84.12, மும்பையில் ரூ.86.34 என்ற அளவில் விற்கப்பட்டு வருகிறது. சென்னை யிலும் பெட்ரோல் விலை விரைவில் ரூ.100-ஐ தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் தொகை

சமையல் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்து, அன்றைய விலை நிலவரப்படி ஆன்லைனில் வாடிக்கையாளர் பணத்தை செலுத்திவிட்டாலும், சிலிண்டர் டெலிவரி செய்யும் நாளன்று விலை உயர்ந்தால், அந்த கூடுதல் தொகையை நிலுவைத் தொகையாக குறிப்பிட்டு எண்ணெய் நிறுவனங்கள் வசூலித்து வருகின்றன. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments