அரசாணையின்படி கறம்பக்குடி ஒன்றிய தலைவரை அரசு விழாக்களுக்கு அழைக்க அதிகாரிகளுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.!



புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி யூனியன் தலைவர் மாலா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கறம்பக்குடி ஒன்றிய பஞ்சாயத்தில் 2019-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று யூனியன் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டேன். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7-ந்தேதி கரம்பக்குடியில் யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. 

இதில் 80 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கரம்பக்குடி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றுபவர்கள் எனக்கு தகவல் தெரிவிக்காமல் ஏற்கனவே கவுன்சிலர்கள் கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானங்களில் 78, 79, 80-வது தீர்மானங்களை மாற்றி புதிய தீர்மானங்களை வைத்துள்ளனர். மேலும் கறம்பக்குடி யூனியன் அலுவலகத்தின் அருகில் புதிதாக அமைக்கப்பட்ட மின்கம்பம் திறப்பு விழா(அரசு விழா) பற்றி எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை. என்னை இந்த விழாவிற்கு அழைக்கவும் இல்லை. 

இதேபோல ரூ.17 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய தண்ணீர் தொட்டி திறப்பு விழாவுக்கும் முறையான அழைப்பு விடுக்கவில்லை. தகவல் தெரிவிக்கவும் இல்லை. நான் பெண் என்பதாலும், எதிர்க்கட்சியை சேர்ந்தவள் என்பதாலும் அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் பலன் இல்லை. 

தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994-ன்படியும், 1997-ம் ஆண்டில் வெளிவந்த அரசாணையின்படியும் யூனியன் தலைவருக்கு அரசு விழாக்கள் குறித்து உரிய அழைப்பு மற்றும் தகவல் தெரிவிக்க வேண்டும். 

எனவே சட்டப்படி யூனியன் தலைவராக நான், எனது பணியை முறையாக செய்ய அனுமதிக்கவும், என்னை புறக்கணிக்கும் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர்களின் நடவடிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட மேல் அதிகாரிகள் விசாரிக்கும்படியும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இனிவரும் காலங்களில் அரசாணையின் அடிப்படையில் அரசு விழாவின்போது யூனியன் தலைவராக மனுதாரருக்கு முறையாக அழைப்பிதழ் வழங்கி, அழைத்து அரசு விழா நடத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments