தமிழகத்திற்கு வெளிநாடு, பிற மாநிலங்களில் இருந்து வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகள்; தமிழக அரசு உத்தரவுதமிழகத்திற்கு வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

விரிவான வழிகாட்டுதல்கள்

இதுகுறித்து சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியாவிற்கு கடந்த 22-ந்தேதிக்கு பிறகு, சர்வதேச அளவில் பயணிகள் வருவது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டு இருந்தது.அதைத்தொடர்ந்து சில திருத்தங்களுடன் விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிடுகிறது.

பரிசோதனைக்கு உட்பட வேண்டியவர்கள்

உடல் பரிசோதனை தொடர்பான புதிய வழிகாட்டுதலின்படி, சர்வதேச பயணம் மேற்கொண்டு 14 நாட்களில் சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற (ஐ.எல்.ஐ.) நோய் அறிகுறிகளில் ஏதாவது தென்பட்டவர்கள்; சோதனைக்கூட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களில் நோய் அறிகுறி தென்பட்டவர்கள்;

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களில் நோய் அறிகுறியுள்ளவர்கள்; கடுமையான மூச்சுத் திணறல் உள்ளவர்கள்; கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் 5 முதல் 10 நாட்கள் நெருங்கிய தொடர்பில் இருந்த நோய் அறிகுறி இல்லாதவர்கள்;

கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் நோய் அறிகுறியுள்ளவர்கள்; மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு நோய் அறிகுறியிருக்கும் அனைத்து நோயாளிகள்; வெளிநாடுகளில் இருந்து வந்து 7 நாட்களுக்குள் நோய் அறிகுறியுள்ளவர்கள் ஆகியோருக்கு கண்டிப்பாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.

கேரளா, மராட்டியம்

மற்ற மாநிலங்களில் இருந்து வந்த (விமானம் அல்லது ரெயில் அல்லது சாலை மார்க்கமாக) பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட வேண்டும். கேரளா, மராட்டியம் தவிர மற்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 14 நாட்களுக்கு சுய கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

கேரளா, மராட்டிய மாநிலங்களில் இருந்து வந்தவர்கள், 7 நாட்களுக்கு வீட்டு தனிமையிலும், அடுத்த 7 நாட்களுக்கு சுய கண்காணிப்பிலும் இருக்க வேண்டும். இவர்களில் யாருக்காவது இருமல், காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனைகளை நாட வேண்டும்.

வெளி மாநிலங்களில் இருந்து வந்த அறிகுறி தென்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். அவர்களுக்கு அறிகுறியோடு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அறிகுறி இல்லாமல் கொரோனா உறுதி செய்யப்பட்டால், கொரோனா சிகிச்சை மருத்துவ மையங்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

அறிகுறி இல்லாத நிலையில் தொற்றும் உறுதி செய்யப்படவில்லை என்றால் அவர்கள், 14 நாட்கள் சுயகண்காணிப்பில் இருக்க வேண்டும். தொற்று உறுதி செய்யப்படாத நிலையில் அறிகுறி தென்பட்டால், மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

ஐரோப்பிய நாட்டு பயணிகள்

இங்கிலாந்து, பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து விமானம் மூலம் வரும் பயணிகளைத் தவிர மற்ற சர்வதேச பயணிகள் தங்களின் சுய விளக்கத்தை ஏர் சுவிதா இணையதளத்தில் (www.newdelhiairport.in) வெளியிட வேண்டும்.

பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு எடுத்த, கொரோனா தொற்றில்லை என்ற மருத்துவ அறிக்கையை அதில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பயணத்திற்குப் பின் 14 நாட்கள் அவர்கள் சுய கண்காணிப்பில் இருக்க வேண்டும். அது பற்றிய விவரங்களை தேசிய அல்லது மாநில உதவி மையங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

தனிமைப்படுத்துதல்

இங்கிலாந்து, பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து விமானம் மூலம் வரும் பயணிகள், கடந்த 14 நாட்களுக்கு முன்பு செய்த பயண விவரங்களை இணைய தளத்தில் அளிக்க வேண்டும். பரிசோதனையில் தொற்றில்லை என்று காணப்படும் பயணிகள், வேறு விமான பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.

7 நாட்கள் கழித்து அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும். தொற்றில்லை என்று காணப்பட்ட பிறகு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவர். மேலும் 7 நாட்கள் அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்படுவர். தொற்று இருந்தால் ஏற்கனவே உள்ள வழிகாட்டுதலின்படி சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பிரேசில் நாட்டில் இருந்து வந்த, கொரோனா தொற்று நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள், சம்பந்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அவர்களில் யாருக்கும் தொற்று இருந்தால் ஏற்கனவே உள்ள வழிகாட்டுதலின்படி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

நோயாளிகள் தரம் பிரிப்பு

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்களை, மிகுந்த லேசான தொற்று அல்லது தொற்றுக்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள் என்று மருத்துவ ரீதியாக தரம் பிரித்து அனுப்ப வேண்டும். அவர்கள் ஆரோக்கிய சேது செயலியை நாள் முழுவதும் செயலில் வைத்திருக்க வேண்டும்.

தொடர்ந்து 10 நாட்களுக்கு காய்ச்சல் இல்லை என்றாலும், அறிகுறி தென்படவில்லை என்றாலும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படலாம்.

கட்டுப்படுத்தப்படும் பகுதிகள்

ஒரு பகுதியில் 3-க்கும் மேற்பட்டவர்கள் அல்லது ஒரு குடும்பத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்க ஏதுவான இடமாக கருத வேண்டும். இதுபோன்ற நிலை கிராமங்களில் ஏற்பட்டால் அந்த கிராமம் முழுவதையும் கட்டுப்பாட்டு பகுதியாக குறிக்க வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி பகுதி என்றால், அந்த தெருவை அல்லது தெருவின் ஒரு பகுதியை கட்டுப்பாட்டு பகுதியாக கொண்டு வர வேண்டும். பல அடுக்குமாடியில் இந்த நிலை வந்தால், அந்த அடுக்கு மாடி கட்டிடம் முழுவதையும் கட்டுப்பாட்டு பகுதியாக கருத வேண்டும்.

சமூக இடைவெளியை அமல்படுத்த முடியாத குடிசைப் பகுதிகளில் இதுபோன்ற சூழ்நிலை எழுந்தால், அவர்களை கொரோனா மையங்களுக்கு கொண்டு சென்று தனிமைப்படுத்த வேண்டும்.

கடுமையான நடவடிக்கை

கட்டுப்பாட்டு பகுதிகளில் மிகக்கடுமையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 14 நாட்களுக்குள் அங்கு தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முடிக்கப்பட வேண்டும். அங்கு ஒருவருக்கும் தொற்றில்லை என்ற நிலை எட்டப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments