தமிழகத்திலேயே முதன்முறை: அறுவை சிகிச்சை செய்யாமலேயே புற்றுநோய்க்கு துல்லியமாக ‘ஸ்டீரியோ’ கதிரியக்க சிகிச்சை- மதுரை அரசு மருத்துவமனை சாதனை..!
தமிழகத்திலேயே முதல் முறையாக அறுவை சிகிச்சை செய்யாமலேயே புற்றுநோய்க்கு துல்லியமாக ‘ஸ்டீரியோ’ கதிரியக்க சிகிச்சை செய்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை டீன் சங்குமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திண்டுக்கல்லைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுப்பிரமணி (50). இவர், ஏற்கெனவே கணையம் பகுதியில் புற்றுநோய் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்திருந்தவர். தற்போது மீண்டும் வயிற்று வலி மற்றும் பசியின்மையால் அவதிப்பட்டார்.

சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை புற்றுநோய் கதிரியக்க சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவ நிபுணர்கள் பெட் சிடி ஸ்கேன் செய்து பார்த்தனர்.

அதில், அவருக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்த கணையம் பகுதியில் உள்ள திசுக்கள் பாதித்திருப்பது தெரியவந்தது. இதற்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய முடியாததால் சமீபத்தில் முதல்வரால் தொடங்கப்பட்ட மண்டல புற்றுநோய் மையத்தில் அதி நவீன linear Accelerator என்ற கதிரியக்கக் கருவி செயல்பாட்டில் உள்ளது.

இந்தக் கருவி மூலம் Stereo radiotheraphy (ஸ்டீரியோ ரேடியோதெரபி) எனப்படும் சிகிச்சையை நோயாளிகளுக்கு அளிக்கலாம். இந்தக் கருவி மூலம் மற்ற உறுப்புகளுக்கு எந்த விதமான கதிரியக்க பாதிப்பு இல்லாமல் மிகத் துல்லியமாக புற்றுநோய் செல்களை மட்டும் அழிக்கலாம்.

மேலும், 30 முதல்35 நாட்கள் கொடுக்க வேண்டிய கதிரியக்க சிகிச்சையை 5 அல்லது 6 நாட்களிலேயே அதே வீரியத்துடன் கொடுத்து முடிக்க முடியும்.

அப்படிப்பட்ட இந்த கருவி சிகிச்சைதான் சுப்பிரமணியத்திற்கு மேற்கொள்ளப்பட்டது . தற்போது புற்றுநோயிலிருந்து மீ்ண்டு நல்ல குணமடைந்து வருகிறார்.

இந்த சிகிச்சையின் மூலம் மூளையில் ஏற்படும் கட்டிகள், நுரையீரல் கட்டிகள், அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடியாத கட்டிகள் போன்றவை எங்கிருந்தாலும் அதற்கு இந்த சிகிச்சையை அளிக்க முடியும்.

இந்த சிகிச்சை கருவி, தமிழக அரசு மருத்துவமனைகளில் முதன்முதலாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ள 4 முதல் 5 லட்சம் வரை செலவாகும். ஆனால், இந்த சிகிச்சை இலவசமாக அரசு மருத்துவமனையில் கொடுக்கப்பட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது, மதுரை அரசு மருத்துவமனை புற்றுநோய் கதிரியக்க சிகிச்சைப்பிரிவு தலைவர் (பொ) பேராசிரியர் மகாலட்சுமி பிரசாத் உடனிருந்தார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments