6 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி; பட்டியல் சேகரிக்கிறது அரசு: எந்தெந்த கூட்டுறவு சங்கங்கள் விவரம்
ஏழை மக்கள் கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரையிலான நகைகளை அடமானம் வைத்துப் பெற்ற நகைக் கடன்களையும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்வதாக அரசு அறிவித்த அடிப்படையில் நகைக்கடன் நிலுவை பட்டியலை அனுப்புமாறு அனைத்து வங்கிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் பழனிசாமி 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், 2019-20ஆம் ஆண்டு கரோனா பெருந்தொற்றின் காரணமாக உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின. தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் இருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியது.

இந்நிலையில், விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை, எளிய குடும்பங்கள் நகைக் கடன் பெற்று அதைத் திரும்பச் செலுத்த முடியாத சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பினால் கூட்டுறவு சங்கங்களில் நகைக் கடன் பெற்று திரும்பச் செலுத்துவதில் சிரமத்திற்குள்ளான ஏழை எளிய மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக தமிழக அரசு, கூட்டுறவு நிறுவனங்களில் 6 பவுன் வரை அடகு வைத்துப் பெற்ற நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்கின்றது என அறிவித்தார்.

இது பின்னர் அரசாணையாக வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது நகைக்கடன்களை தள்ளுபடி செய்யும் முனைப்பில் அரசு இறங்கியுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்ரமணியன் அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் கடிதம் என்றை அனுப்பியுள்ளார். அதில் இத்துடன் அனுப்பியுள்ள எக்‌ஷல் படிவத்தில் ஜனவரி 31 வரையிலான நகைக்கடன் விவரங்களை அனுப்புமாறு வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் இணைப்பதிவாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

எந்தெந்த சங்கங்கள் விவரம்:

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:


“தலைமை கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் தொடர்பான விவரங்களை மாவட்ட வாரியாக தொடர்புடைய வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்களும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், பணியாளர் கூட்டுறவு சங்கங்கள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், பெரும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் வாரியான விவரங்களை சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் மண்டல இணைப்பதிவாளர் உரிய படிவத்தில் குறுந்தகட்டில் பதிவாளர் அலுவலக தொடர்புடைய பிரிவுகளின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது”.

இவ்வாறு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments