புதுக்கோட்டை அருகே அரசு தொடக்கப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு




புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பிடாரம்பட்டியில் கரோனா ஊரடங்கில் முடங்கி இருந்துவிடாமல், கொடையாளர்கள் உதவியுடன் அரசு தொடக்கப் பள்ளியை ஆசிரியர்கள் மேம்படுத்தியுள்ளனர்.

பொன்னமராவதி அருகே ஏனாதி ஊராட்சி பிடாரம்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2002-ல் இங்கு அரசு தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது.



பின்னர், 2016-ல் இருந்து ஆங்கில வழிப் பள்ளியாக மாற்றப்பட்ட இப்பள்ளியில், தலைமை ஆசிரியராக கோ.பார்த்தசாரதியும், உதவி ஆசிரியராக ஆர்.சக்திவேல் முருகனும் பணிபுரிந்து வருகின்றனர்.

இருவரும், இப்பள்ளியை மேம்படுத்த வேண்டும் என முடிவு செய்து உள்ளூர் கொடையாளர்களை அணுகினர். கல்விச்சீர் திருவிழா நடத்தி மாணவர்களுக்குத் தேவையான இருக்கைகள், கற்றல் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்கப்பட்டன. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் பள்ளிக்கு வருவதற்கான ஆர்வத்தை மாணவர்களிடையே அதிகரிப்பதற்காக, பள்ளியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


மேலும், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பெற்றோர்களையும் பங்கேற்கச் செய்வதால் அவர்களும் பள்ளியின் மீது ஈடுபாடு காட்டுகின்றனர். குறிப்பாக, 57 பாரம்பரிய உணவுகளோடு நடைபெற்ற உணவுத் திருவிழாவானது பொன்னமராவதி வட்டார மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.



இதனால், பிடாரம்பட்டியில் இருந்து யாரும் தனியார் பள்ளிக்குச் செல்வது தடுக்கப்பட்டதோடு, பிற ஊர்களில் இருந்து இப்பள்ளியில் சேர்ந்த மாணவர்களோடு சேர்த்து மொத்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. கரோனா காலத்தில் மாணவர்கள் வராத போதும் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், கொடையாளர்களை அணுகி நவீனப் பள்ளியாக மாற்றியுள்ளனர்.

இதுகுறித்துப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கோ.பார்த்தசாரதி கூறும்போது, ''கரோனா பரவல் குறைந்ததை அடுத்து பள்ளிகளைத் திறந்தாலும், மாணவர்கள் பள்ளிக்கு வருவதில்லை. இந்தச் சமயத்தில் பள்ளி மேம்பாட்டுப் பணிக்காகக் கொடையாளர்களைச் சந்தித்தோம்.

அதன்படி, கடந்த வாரம் மேலைசிவபுரியைச் சேர்ந்த அ.முத்து என்பவர் மூலம் ரூ.51,000 மதிப்பில் புரொஜெக்டர், திரை உள்ளிட்ட வசதிகளுடன் ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்பட்டது. அதேபோன்று, பிடாரம்பட்டியைச் சேர்ந்த கா.மலையாண்டி என்பவர் மூலம் பிரிண்டர் ஏற்பாடு செய்யப்பட்டது. ஏற்கெனவே, பள்ளியில் 1 மடிக்கணினியுடன் 3 கணினிகள் உள்ளன.

நவீன வசதிகளைக் கொண்டு தொடர்ந்து, பள்ளி மேம்படுத்தப்பட்டு வருவதால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் பாராட்டும் அளவுக்கு இப்பள்ளியை மேம்படுத்தியதில் ஆசிரியர்களாகிய எங்களுக்கும் மகிழ்ச்சி'' என்று தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments