அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி கண்ணோட்டம்.




கிராமப்புறங்களை அதிகம் கொண்ட அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதி விவசாயத்தையும், கடலோரப் பகுதியையும் உள்ளடக்கியது என்பதால் கடல் சார் தொழிலையும் பிரதானமாகக் கொண்ட தொகுதியாகும்.

இந்தத் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,36,040. இவர்களில் 1,16,883 பேர் ஆண்கள், 1,19,151 பேர் பெண்கள், 6 பேர் திருநங்கைகள்.


27 வார்டுகளைக் கொண்ட அறந்தாங்கி நகராட்சியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 34 ஆயிரம் மட்டுமே.

இவர்களுடன், மணமேல்குடி வட்டத்தைச் சேர்ந்த கிராமங்கள் (சுமார் 77 ஆயிரம் வாக்காளர்கள்), அறந்தாங்கி வட்டத்தைச் சேர்ந்த கிராமங்கள் (சுமார் 52 ஆயிரம் வாக்காளர்கள்) இவற்றுடன் ஆவுடையார் கோயில் வட்டத்தைச் சேர்ந்த கிராமங்களும் (சுமார் 77 ஆயிரம் வாக்காளர்கள்) அறந்தாங்கி தொகுதியைச் சேர்ந்தவை. இவற்றில் பெரும்பகுதி விவசாயம் மட்டுமே வாழ்வாதாரம். 



அறந்தாங்கி தொகுதியில் முக்குலத்தோர் அதிகம். இவர்களில் அகமுடையார் எண்ணிக்கை அதிகம். மேலும், தலித்துகளும், இஸ்லாமியர்களும், முத்தரையர்களும் கணிசமாக உள்ளனர்.

மக்களின் பிரச்னை

புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்த பிறகு, இயல்பாகவே மாவட்டத் தலைமை மருத்துவமனை அடுத்த பெரிய நகருக்குச் சென்றுவிடும் என்பதன்படி, அறந்தாங்கியை அவ்வப்போது மாவட்டத் தலைமை மருத்துவமனை என்கிறார்கள்; ஆனால், அதற்கான எந்த அடிப்படை கட்டமைப்புகளும் இல்லை என்ற வருத்தம் மக்களிடையே இருக்கிறது. 

நகரில் போக்குவரத்து நெருக்கடி இல்லாத சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லையென்ற கோரிக்கை பிரதானமாக இருக்கிறது.

கல்லணையில் இருந்து மும்பாலை வரையிலான காவிரிக் கடைமடை பாசனத் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டால் விவசாயம் செழிக்கும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

மீனவர்கள் கோரிக்கை

தஞ்சை எல்லையிலிருந்து ராமநாதபுரம் எல்லை வரை (அதாவது கட்டுமாவடியில் இருந்து ஏனாதி வரை) சுமார் 42 கிமீ தொலைவுள்ள கடற்கரையில் சுமார் 30 கடலோரக் கிராமங்கள் உள்ளன. இங்கு மீன் பிடித்தொழில் மட்டுமே பிரதானம்.

கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் ஆகியவற்றிலுள்ள விசைப்படகு மீன்பிடித் தளங்களில் சுமார் 600 விசைப்படகுகளும், இதர மீன்பிடித் தளங்களில் சுமார் 3500 நாட்டுப்படகுகளும் இயங்கி வருகின்றன. ஏறத்தாழ 45 ஆயிரம் மீனவ வாக்காளர்கள் உள்ளன.

பிரம்மாண்ட கடலில்- அளவிட முடியாத தண்ணீருக்குள்தான் இவர்களின் வாழ்க்கை என்றாலும், குடிப்பதற்கு நல்ல தண்ணீர் வழங்கப்படுவதில்லை என்பது இங்கு தீர்க்கப்படாத நீண்ட காலக் கோரிக்கை. ஆழ்குழாய் தண்ணீர் குடம் ரூ. 3-க்கும், குடிப்பதற்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குடம் ரூ. 15-க்கும் விலை கொடுத்து வாங்கித்தான் பயன்படுத்துகிறார்கள்.

அரசியல் நிலவரம்

தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் இ.ஏ. ரத்தினசபாபதி, அதிமுகவைச் சேர்ந்தவர். 2016இல் அவர் பெற்ற வாக்குகள் - 69,905. இவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய காங்கிரஸ் வேட்பாளர் தி. ராமச்சந்திரன் (திருநாவுக்கரசரின் மகன்) பெற்ற வாக்குகள் - 67,614.

ஜெ. மறைவுக்குப் பிறகு டிடிவி அணி என அடையாளப்படுத்திக் கொண்ட ரத்தினசபாபதி, கடைசி ஓராண்டில் அதிமுகவில்தான் இருப்பதாக அறிவித்தார். தற்போது மீண்டும் அவர் வாய்ப்பு கேட்கிறார். மேலும், முன்னாள் எம்எல்ஏ எம். ராஜநாயகம், அறந்தாங்கி ஒன்றியச் செயலர் பெரியசாமி, ஆவுடையார் கோயில் டாக்டர் மணிகண்டன் போன்றோருக்கும் போட்டியிட வாய்ப்பு கோரியுள்ளனர்.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டால் மாநில மகளிரணிச் செயலர் கவிதா ஸ்ரீகாந்த் வேட்பாளராக அறிவிக்கப்படலாம்.

திமுகவில் முன்னாள் எம்எல்ஏ உதயன் சண்முகம் உள்பட 75 பேர் விருப்பமனு அளித்திருக்கிறார்கள் வேறெந்த தொகுதிக்கும் இத்தனை பேர் விருப்பமனு அளித்திருப்பார்களா எனத் தெரியவில்லை.

திருச்சி மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக உள்ள முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக்கரசரின் சொந்தத் தொகுதி இது. அதிமுக சார்பில்  4 முறையும், அதிமுக ஜெ. அணியின் சார்பில் ஒருமுறையும், சொந்தக் கட்சியின் சார்பில் ஒரு முறையும் என மொத்தம் 6 முறை வென்றுள்ளார். 2011 ஆம் ஆண்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.

திமுக அணியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருமயம், ஆலங்குடி ஆகிய இரு தொகுதிகளில் திமுகவுக்கு என உறுதி செய்து வேலை செய்யத் தொடங்கிவிட்டதால், அறந்தாங்கியை ஒதுக்கக் கேட்போம் என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.

குறிப்பாக 2016 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த திருநாவுக்கரசரின் மகன் தி.ராமச்சந்திரனுக்காகவே அறந்தாங்கி கேட்கப்படும் எனப் பேசப்படுகிறது. 

இதுவரை வென்றவர்கள்

1951- முகமது சாலிக் (காங்.) - 19,064, ராமசாமி தேவர் (சுயே.)- 15,335

1957- எஸ். ராமசாமி தேவர் (சுயே.)- 17,637, முத்துவேலன் (காங்)- 14,633

1962- ஏ. துரையரசன் (திமுக)- 33,781, ராமநாதன் சேர்வை (காங்.) 25,112

1967- ஏ. துரையரசன் (திமுக)- 42,943, கே.பி. சேர்வை (காங்.)- 36,522

1971-எஸ். ராமநாதன் (திமுக)- 49,322, ராமநாதன் சேர்வை (நிறுவன காங்.)- 37,289 

1977- சு. திருநாவுக்கரசர் (அதிமுக)- பி. சுப்புக்குட்டி (சிபிஐ)- 24,528 

1980- சு. திருநாவுக்கரசர் (அதிமுக)- 50,792, எம். மொகமது மசூத் (சுயே.)- 36,519

1984- சு. திருநாவுக்கரசர் (அதிமுக)- 70,101, எஸ். ராமநாதன் (திமுக)- 40,197

1989- சு. திருநாவுக்கரசர் (அதிமுக ஜெ)- 61,730, சண்முகசுந்தரம் (திமுக)- 40,027 

1991- சு. திருநாவுக்கரசர் (தாமக)- 73,571, குழ. செல்லையா (அதிமுக)- 52,150

1996- சு. திருநாவுக்கரசர் (அதிமுக)- 70,260, எஸ். சண்முகம் (திமுக)- 56,028

2001- பி. அரசன் (எம்ஜிஆர் அதிமுக)- 58,499, ஏ. சந்திரசேகரன் (காங்.)- 38,481

2006- உதயன் சண்முகம் (திமுக)- 63,333, ஒய். கார்த்திகேயன் (அதிமுக)- 45,873
 
2011- எம். ராஜநாயகம் (அதிமுக)- 67,559, சு. திருநாவுக்கரசர் (காங்.)- 50,903

2016- இ.ஏ. ரத்தினசபாபதி (அதிமுக)- 69,905, தி. ராமச்சந்திரன் (காங்.)- 67,614

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments