பழைய வாகனத்தை 'அழித்து', புதிய வாகனம் வாங்கினால் கிட்டும் சலுகைகள் என்னென்ன?
புதிய வாகன கொள்கையை மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் வெளியிட்டிருக்கிறார். "இந்தக் கொள்கை அனைத்து தரப்புக்கு பயன் அளிக்கும். எரிபொருள் பயன்பாடு குறையும். சுற்றுச்சூழல் மாசு குறையும், பழைய வாகனங்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் மூலப்பொருட்களின் விலை குறையும். மீண்டும் புதிய வாகனங்களை வழங்குவதற்கு சலுகை கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால், புதிய வாகனங்கள் வாங்குவதால் அரசின் வருமானமும் உயரும். அனைத்து தரப்பினரும் இதன் மூலம் பயனடைவார்கள்" என்று அவர் குறிப்பிட்டார். தற்போது, இந்திய ஆட்டோமொபைல் சந்தை ரூ.4.5 லட்சம் கோடி சந்தையாக இருக்கிறது. விரைவில் ரூ.10 லட்சம் கோடி சந்தையாக மாறும் என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். சரி, இந்தப் புதிய வாகன கொள்கை பற்றி சற்றே தெளிவாகப் பார்ப்போம்.

எவ்வளவு காலம்?

பதிவு செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலே உள்ள தனிநபர்களின் வாகனங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலே உள்ள வர்த்தக வாகனங்கள் ஃபிட்னஸ் டெஸ்டுக்கு அனுப்பட படவேண்டும். ஒருவேளை, இந்த சோதனையில் தோல்வி அடையும் பட்சத்தில், 'ஸ்கிராப்'புக்கு (அழிப்பதற்கு) அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், 15 ஆண்டுகளுக்கு மேலான அரசாங்க மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்கள், தீ பிடித்த வாகனங்கள், கலவரத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்கள், பயன்படுத்த முடியாது என சான்றிதழ் வழங்கப்பட்ட வாகனங்கள் உடனடியாக 'ஸ்கிராப்'புக்கு அனுப்பப்படும்.

வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் ஃபிட்னெஸ் சோதனை மையங்களும், ஸ்கிராப் மையங்களும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக 15 ஆண்டுகளுக்கு மேலான அரசு மற்றும் பொதுத்துறை வாகனங்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஸ்கிராப்பாக மாற்றப்படும்.

என்ன கிடைக்கும்?

ஸ்கிராப்பிங் மையத்தில் வாகனத்தை அழித்த பிறகு, இதற்கான சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் மூலம் புதிய வாகனம் வாங்கும்பட்சத்தில் 5 சதவீதம் வரை தள்ளுபடி வழங்க வேண்டும் என வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தவிர, பழைய வாகனத்தை அழிக்கும்போது, புதிய வாகனத்தின் எக்ஸ் ஷோரூம் விலையில் 4 முதல் 6 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்க கூடும். பழைய வாகனத்தில் உள்ள காப்பர், ரப்பர், அலுமினியம், ஸ்டீல் மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்டவை மறுசுழற்சி செய்யப்படும்.

அதேபோல, சாலை வரியிலும் தள்ளுபடி வழங்க மாநில அரசுகளுக்கு அறிவுருத்தப்பட்டிருக்கிறது. தனிநபர் வாகனமாக இருந்தால் 25 சதவீதமும், வர்த்தக வாகனமாக இருந்தால் 15 சதவீதம் அளவுக்கு சாலை வரியில் தள்ளுபடி வழங்கப்படும். அதேபோல ஸ்கிராப் சான்றிதழ் மூலம் வாகன பதிவு கட்டணத்தில் சலுகையும் பெற்றுக்கொள்ள முடியும்.

நாட்டின் எந்த இடத்தில் இருக்கும் ஸ்கிராபிங் மைத்தில் இந்த வாகனங்கள் அழிக்க முடியும். ஆனால், முறையான ஆவணங்கள் இருப்பது அவசியம். திருட்டு வாகனங்களை கண்டறிவதற்காக முறையான ஆவணங்கள் கேட்கப்படுகின்றன.

எவ்வளவு வாகனங்கள்?

இலகுரக வானங்கள் பிரிவில் 20 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்கள் 51 லட்சம் அளவுக்கு உள்ளன. இதே பிரிவில் 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்கள் 34 லட்சம் அளவுக்கு உள்ளன. கனரக வாகன பிரிவில் 17 லட்சம் வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கு மேலே செயல்பட்டுவருகின்றன.

வாகனங்கள் அதிகமாக இருப்பதால் சுற்றுச்சூழல் மாசு அதிகமாகும். அதைவிட பழைய வாகனக்கள் இவ்வளவு அதிகமாக இருப்பதால் சுற்றுச்சுழல் மேலும் மோசமாகும். வழக்கமான வாகனங்களை விட இதுபோன்ற பழைய வாகனங்கள் 10 முதல் 12 மடங்குக்கு மேல் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். அரசாங்கத்துக்கு பழைய வாகனங்களை அழித்து, புதிய வாகனங்கள் வாங்குவதால் சுமார் ரூ.40,000 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரி வசூல் கூடுதலாக கிடைக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments