கொரோனா தாக்கம் அதிகரிப்பு எதிரொலி: கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகள் ரத்து 'ஆன்லைன்' முறையில் வகுப்புகள் தொடர அரசு உத்தரவு




கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருந்தன. நோய் பாதிப்பு சற்று குறைந்ததை அடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின.


அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து மற்ற மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று மீண்டும் தமிழகத்தில் அதிகமாக பரவத் தொடங்கியிருக்கிறது.

இதனை கருத்தில் கொண்டு ஏற்கனவே பள்ளிகளில் நடைபெற்று வந்த 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளை ரத்து செய்து மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டு இருந்தது.



நேரடி வகுப்புகளை தொடரலாமா?

அதன் தொடர்ச்சியாக கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகளை தொடரலாமா? என்பது குறித்து ஆலோசிக்க நேற்று காணொலி காட்சி மூலம் அவசரக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வாவுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது சுகாதாரத்துறை, பேரிடர் மேலாண்மை துறையை சேர்ந்த அதிகாரிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், உயர் கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோரும் இருந்தனர்.

இந்த ஆலோசனையில் அதிகரித்துவரும் கொரோனா நோய்த் தொற்றுக்கு மத்தியில் நேரடி வகுப்புகளை தொடரலாமா?, செமஸ்டர் தேர்வுகளை எப்படி நடத்துவது? என்பது உள்பட பல்வேறு விஷயங்களை குறித்து பேசப்பட்டது. ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு இது தொடர்பாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆலோசனை

முன்னதாக தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதை கருத்தில்கொண்டும், மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுனர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையிலும், பல்கலைக்கழக துணை வேந்தர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் முதல் கட்டமாக 7.12.20 அன்று முதுகலை இறுதி ஆண்டு மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான கல்லூரிகள் திறக்கவும் மற்றும் 8.2.21 முதல் இளங்கலை மற்றும் முதுகலை கல்லூரிகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டது.

தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலை கருத்தில்கொண்டு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேற்று உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளருடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தவர்கள், தொழில்நுட்ப கல்வி இயக்குனர், கல்லூரி கல்வி இயக்குனர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குனரின் பரிந்துரைகளை ஏற்று, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் உயர் கல்வித்துறை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைகளோடு ஆலோசிக்கப்பட்டது.

இணைய வழி முறையில் வகுப்புகள்

கொரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், கொரோனா தொற்றால் மாணவர்களும், அதனால் பொதுமக்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதாலும், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி, வரும் 23-ந் தேதி (இன்று) முதல் உயர் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மற்றும் தமிழகத்தில் செயல்படும் அனைத்து நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும் வகுப்புகள் இணையவழி முறையில் வாரத்தில் 6 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

அறிவியல், பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்ப பிரிவு மாணவர்களுக்கு குறிப்பாக இறுதி பருவ மாணவர்களுக்கு செயல்முறை வகுப்புகள் மற்றும் செயல்முறை தேர்வுகள் வருகிற 31-ந் தேதிக்குள் முடித்திடவும், மேலும் இந்த பருவத்துக்கான இறுதி தேர்வுகளை இணைய வழியில் மட்டுமே நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி கல்லூரிகளில் நடைபெற்று வந்த நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, அந்த வகுப்புகள் இணையவழியில் மட்டுமே நடைபெற உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments