11-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு தனித்தேர்வு நடத்தலாம் ஐகோர்ட்டு உத்தரவு




தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை கடந்த பிப்ரவரி 25-ந் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ‘பொதுத்தேர்வு நடத்தவில்லை என்றாலும், பள்ளி அளவில் தேர்வு நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் 11-ம் வகுப்பில் சேரும்போது மாணவர்களுக்கு விரும்பும் பாடத்திட்டத்தில் சேர்க்கை வழங்க முடியும். தேர்வுகளை ரத்து செய்வதற்கு முன்பு எந்த ஒரு ஆலோசனையையும் அரசு மேற்கொள்ளவில்லை. தேர்தலை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது’ என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தனித்தேர்வு

அந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், ‘பொதுநலன் சார்ந்த விஷயங்களில் அதிகாரிகள் உரிய ஆலோசனைகளுக்கு பிறகே முடிவுகள் எடுப்பார்கள். எனவே, எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என்ற மனுதாரர் வாதத்தை ஏற்க முடியாது. மாணவர்கள் தேர்ச்சி தொடர்பான அரசாணையையும் ரத்து செய்ய முடியாது.

அதேசமயம், 10-ம் வகுப்பில் இருந்து 11-ம் வகுப்புக்குச் செல்லும் மாணவர்கள், விருப்பப் பாடத்தை தேர்வுசெய்யும் வகையில், அவர்களின் தகுதியைக் கண்டறிய பள்ளிகள் தனித்தேர்வு நடத்திக்கொள்ளலாம். இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை உரிய வழிகாட்டி விதிகளை உருவாக்கி அறிவிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்துவைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments