தமிழகத்தில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு: காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணிவரை வாக்குப்பதிவு
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

தேர்தலில் போட்டியிடுவதற்கு 7 ஆயிரத்து 255 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் 2 ஆயிரத்து 727 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தற்போது 4 ஆயிரத்து 512 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. (நேற்றிரவு 6.30 மணி நிலவரப்படி 215 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன).


கடந்த ஜனவரி 20-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்களாளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் இருந்தனர். பின்பு இணையதளத்திலும், நேரடியாகவும் வாக்காளர் பட்டியலில் சேர்வதற்கு பலர் விண்ணப்பித்து இருந்தனர். ஆக தற்போது 6 கோடியே 29 லட்சத்து 43 ஆயிரத்து 512 ஆக வாக்காளர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இவர்களின் ஆண்கள் 3 கோடியே 9 லட்சத்து 95 ஆயிரத்து 440 பேர், பெண்கள் 3 கோடியே 19 லட்சத்து 40 ஆயிரத்து 880 பேர். 7 ஆயிரத்து 192 பேர் மூன்றாம் பாலினத்தவர். கடந்த 2 மாதத்தில் புதிதாக 2 லட்சத்து 69 ஆயிரத்து 66 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பறிமுதல்

தமிழகத்தில் பறக்கும்படை உள்ளிட்ட குழுவினர் நடத்திய சோதனையில் ரூ.231.63 கோடி மதிப்புள்ள பணம், பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

சி-விஜில் செயலியை வாக்காளர்கள் பயன்படுத்தி புகார் அளிக்கலாம். இதுவரை சி-விஜில் செயலி மூலம் ஆயிரத்து 971 புகார்கள் வந்துள்ளன. அதில் ஆயிரத்து 368 புகார்கள் சரியானவை என்று கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கரூர்-437, கோவை-323, சென்னை-112 புகார்கள் வந்துள்ளன.

தபால் வாக்குகள்

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 2 ஆயிரத்து 122 புகார்கள் வந்துள்ளன. தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8 ஆயிரத்து 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 80 வயதுக்கு மேல் வாக்காளர்கள் 12.87 லட்சம் பேர் உள்ளனர். இதில், 1 லட்சத்து 49 ஆயிரத்து 567 பேரும், மொத்தமுள்ள 4.81 லட்சம் மாற்றுத்திறனாளிகளில் 45 ஆயிரத்து 397 பேரும் தபால் வாக்குக்கான 12-டி படிவங்கள் அளித்துள்ளனர். கொரோனா பாதிப்புக்குள்ளான யாரும் தபால் ஓட்டுக்கான விண்ணப்பங்களை அளிக்கவில்லை.

வாக்காளர் அடையாள அட்டை

வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்களை, வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் 3 கட்டங்களாக விளம்பரம் செய்ய வேண்டும்.

21 லட்சத்து 39 ஆயிரம் புதிய வாக்காளர்களுக்கு விரைவு தபால் மூலம் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும்.

எனவே வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள யாரும் கவலைப்பட வேண்டாம். ஒருவேளை அடையாள அட்டை வராவிட்டால், ‘இ-எபிக்’ மூலம் பதிவிறக்கம் செய்து, அதைப் பயன்படுத்தலாம்.

திட்டமிட்டபடி பணிகள்

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக இதுவரை படத்துடன் ஒரு புகார் வந்துள்ளது. அதன் பேரில் நடவடிக்கை எடுக்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இனி தபால் ஓட்டுக்கு விண்ணப்பிக்க முடியாது. அதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டது.

எனவே வாக்குச்சாவடி அலுவலரிடம் இதுபற்றி தெரிவித்து, வாக்குச்சாவடியில் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்கலாம்.

கொரோனா தொற்று அதிகரிப்பதால் தேர்தலை தள்ளி வைக்க வாய்ப்புள்ளதா என்று கேட்கிறீர்கள். தேர்தலை நடத்துவதற்கான அனைத்து பணிகளும் திட்டமிட்டபடி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நாங்கள் சுகாதாரத்துறையினருடன் இணைந்து செயல்பட்டு வருகின்றோம். இதுதவிர தேர்தல் ஆணையமும் கள நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

வாக்குப்பதிவு நேரம்

மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தை கண்காணித்து, முக கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர். தேர்தல் வாக்குப்பதிவுக்கான நேரம், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் குரல் பதிவு செய்யப்பட்டு வாக்காளர்களின் செல்போன்களுக்கு அழைப்பாக விளம்பரப்படுத்தப்படுவது பற்றி புகார்கள் வந்துள்ளன. தேர்தல் குழுவின் அனுமதி பெறாமல் விளம்பரம் செய்வது தேர்தல் விதி மீறலாக கருதப்படும்.

வேட்பாளர் ஒருவர் (கரூர்) மீது வந்துள்ள புகார் குறித்து தேர்தல் ஆணையம் சில கருத்துகளை தெரிவித்துள்ளது. அது நிர்வாக ரீதியான ரகசியம் என்பதால் அதை வெளியிட முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்த 20 வீடியோக்களை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments