ஓட்டுநர் உரிமம், வாகனச் சான்றுகளைப் புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு




கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, ஓட்டுநர் உரிமம், வாகன உரிமம் (ஆர்சி) ஆகியவற்றைப் புதுப்பிக்கும் காலத்தை 2021, ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:



''கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கக் கொண்டுவரப்பட்ட லாக்டவுன் நடவடிக்கையால், வாகனங்களின் தகுதிச் சான்று, ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்று, உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களைப் புதுப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து 2020 பிப்ரவரி 1-ம் தேதியிலிருந்து 2021 மார்ச் 31-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.



இதற்கு முன்பாக, காலக்கெடு 2020 மார்ச் 30, ஜூன் 9-ம் தேதி, ஆகஸ்ட் 24-ம் தேதி, டிசம்பர் 27-ம் தேதி ஆகிய தேதிகளில் சான்றிதழ்களைப் புதுப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, சான்றிதழ்களைப் புதுப்பிக்கும் காலம் வரும் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவதாக இருந்தது. இந்தக் காலக்கெடு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அதுவரை ஓட்டுநர் உரிமம், வாகன உரிமைச் சான்று ஆகியவை செல்லுபடியாகும்.

அனேகமாக இதுதான் கடைசி வாய்ப்பாக இருக்கும். இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் வாகன உரிமையாளர்கள் சான்றிதழ்களைப் புதுப்பித்துக் கொண்டு, அதிகாரிகளின் நடவடிக்கையிலிருந்து காத்துக்கொள்ள வேண்டும்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments