வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்ற 10ல் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர்! - மத்திய அரசு தகவல்..




வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்ற 10ல் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர்!
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு வேலைக்காக சென்றவர்களில் மாநிலவாரியாக தமிழகம் 2ம் இடத்தை பிடித்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியாவிலிருந்து கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றவர்களின் 10-ல் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன், பாராளுமன்றத்தில் கடந்த 24ம் தேதி தாக்கல் செய்த அறிக்கையின்படி தமிழகத்தில் இருந்து கடந்த ஜனவரி 2016 மற்றும் மார்ச் 18, 2021ம் ஆண்டுகளுக்கும் இடையில் ஆன 5 ஆண்டுகள் காலகட்டத்தில் 13.1 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.


அந்த வகையில் நாட்டிலெயே அதிகமாக வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்ற மாநிலத்தவர்களாக கேரளவாசிகள் முதல் இடத்தையும், தமிழர்கள் 2வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஜனவரி 2016 மற்றும் மார்ச் 18, 2021ம் ஆண்டுகளுக்கிடையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக இந்தியாவிலிருந்து 1.3 கோடி பேர் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றிருப்பதாகவும், இதில் கேரளத்தவர் 19 லட்சம் பேர் என்றும், தமிழர்கள் 13.1 லட்சம் பேர் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த இரு மாநிலங்களின் பங்களிப்பு மட்டுமே 24% ஆக உள்ளது. 3வது இடத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் உள்ளது. அங்கிருந்து 12.6 லட்சம் பேர் வேலைக்காக வெளிநாடுகளுக்கு பறந்துள்ளனர்.
இதே போல 44.3 லட்சம் பேர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனிடையே கொரோனா காலத்தில் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 4.7 லட்சம் பேர் தமிழகத்திற்கு திரும்பியிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்டிருக்கும் இத்தகவல் தொடர்பாக சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாக பிரிவின் துறைத்தலைவர் மணிவண்ணன் கூறுகையில், தமிழகத்தில் இருந்து வேலைக்காக புலம்பெயர்பவர்களுக்கு சிங்கப்பூர், மலேசியா போன்ற தெற்காசிய நாடுகள் தான் பாரம்பரிய செல்லுமிடங்களாக இருக்கின்றன, இதற்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் உள்ளன.

கொரோனா காலத்தில் சுமார் 50% பேர் தமிழகம் திரும்பியிருக்கின்றனர். இவர்கள் நிலைமை சரியான பிறகு மீண்டும் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடும் என கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments