கடையநல்லூரில் முஸ்லிம் லீக் போட்டி: திமுக கூட்டணியில் முதல் தொகுதி ஒதுக்கீடுதிமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் மூன்று தொகுதிகளில் கடையநல்லூர் தொகுதி மட்டும் உறுதியாகியுள்ளதாக, அக்கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார். இதன் மூலம் திமுக கூட்டணியில் முதல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.6 அன்று நடைபெற உள்ளது. அதிமுக, திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி, மதிமுகவுக்கு தலா 6, காங்கிரஸுக்கு 25, ஆதித்தமிழர் பேரவை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் விடுதலைக் கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன.

அடுத்தகட்டமாக, கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்தத் தொகுதிகளை ஒதுக்குவது என்ற பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (மார்ச் 9) காலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் அக்கட்சியின் தேசியத் தலைவர் காதர்மொய்தீன் தலைமையில், திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவினரை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து, தொகுதிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

அதன்பிறகு, காதர்மொய்தீன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "வேட்பாளர்கள் யார் என்பதை மனதில் வைத்துத்தான் தொகுதிகளைக் கேட்பது வழக்கம். அந்த அடிப்படையில், திருவாடானை, பாபநாசத்தைக் கேட்டோம். திருச்சி கிழக்கு தொகுதியில் எங்கள் மாவட்டத் தலைவர் போட்டியிட விரும்புகிறார். அதனால், அந்தத் தொகுதியைக் கேட்டோம். சிதம்பரம் தொகுதியைக் கேட்டோம்.

சென்னை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியைக் கேட்டோம், அங்கு ஒரு பெண் வேட்பாளரை நிறுத்தலாம் எனக் கேட்டோம். கடையநல்லூர் தொகுதி கேட்டோம். இதில், கடையநல்லூர் தொகுதி மட்டும் உறுதியாகிவிட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அல்லது வாணியம்பாடி, இதில் ஏதேனும் ஒன்றை இன்று மாலை தெரிவிப்பதாகக் கூறியிருக்கின்றனர். அடுத்து, சிதம்பரமா அல்லது பாபநாசமா என்பதை திமுக தலைவரிடம் கேட்டுச் சொல்வதாகத் தெரிவித்தனர். திருவாடானை, திருச்சி கிழக்கு, சென்னையில் ஏதேனும் ஒரு தொகுதி ஆகியவற்றில் எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டனர்" எனத் தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments