புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘அடகுக் கடைகளில் நகைகளை திருப்புவோா் தகவல் தரவேண்டும்’.. மாவட்ட ஆட்சியர் தகவல்.!சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமண மண்டப, அச்சக, கேபிள் டிவி நடத்துனர்கள் மற்றும் அடகுகடை உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நேற்று (01.03.2021) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது.

இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான கால அட்டவனை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமான நியாயமான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யவும், தேர்தல் பிரச்சாரத்தின்போது சமமான, ஆரோக்கியமான போட்டியிடும் சூழலை அனைத்து வேட்பாளர்களுக்கிடையே உருவாக்கிடவும் பணம், பொருட்கள் மூலமாக வாக்காளர்களுக்கிடையே தேவையற்ற செல்வாக்கினை செலுத்துவதை தடுத்திடவும் பல்வேறு அறிவுரைகள், கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதன்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வரப்பெற்ற நிலையில் பொதுக் கூட்டம், விழாக்கள் போன்ற நிகழ்வுகளின்போது வாக்காளர்களுக்கு மறைமுகமாக அடகுவைத்த நகைகளை திருப்புவதற்கு டோக்கன், அடையாள வில்லைகள் மற்றும் இதர வகைகளை பயன்படுத்தி வருவதை எந்தவொரு உரிமையாளரும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. மீறினால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். 

அடகு வைக்கப்பட்டுள்ள நகைகள் வேட்பாளர்கள், முகவர்களால் மொத்தமாக மீளத் திருப்பப்பட்டு வாக்காளர்களுக்கு திருப்பி வழங்கப்படுவதை தவிர்க்க வேண்டும். மொத்தமாக அடகு நகைகளை யாரேனும் திருப்ப முற்பட்டால் அல்லது சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு நேரில் வந்தாலோ சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலருக்கு இதுகுறித்த தகவலை உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

மேலும் ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தங்களது நிறுவனத்தை அணுகி அடகு நகைகளை திருப்ப முற்பட்டாலோ அல்லது அடகு வைக்கப்படும் நகைகள் சந்தேகத்திற்கு இடமான வகைகள் திருப்பப்பட்டாலும் இதுகுறித்த தகவலை உடனடியாக சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.

உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகளில் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் உரிய அனுமதி பெற்றே ஒளிபரப்ப வேண்டும். இதேபோன்று வேட்பாளர்கள் அச்சிடும் சுவரொட்டிகளில் கட்டாயம் சம்மந்தப்பட்ட அச்சகத்தின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். இதனை அச்சக உரிமையாளர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். திருமண மண்டப உரிமையாளர்கள் தங்களது மண்டபங்களில் நடைபெறும் அரசியல் கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு முன்கூட்டியே அனுமதிபெற வேண்டும்.

இதுகுறித்த தகவல்கள் மற்றும் சந்தேகங்களுக்கு தங்கள் தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலைபேசி எண்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் விவரங்கள் குறித்து 04322-221627 என்ற தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைவரும் முறையாக கடைபிடித்து சட்டமன்ற தேர்தலை வெளிப்படை தன்மையுடன் நியாயமான முறையில் நடத்திட அனைவரும் உரிய ஒத்தழைப்பு அளித்திட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
 
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன் இ.ஆ.ப., மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments