கோட்டைப்பட்டினம் அருகே திமுக கூட்டணி கட்சியினரை தாக்கி கார், பைக்குகள் உடைப்பு! நவாஸ்கனி எம்பி தலைமையில் சாலை மறியல்!!!



அறந்தாங்கி தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரனுக்கு ஆதரவு கேட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில துணைத் தலைவரும் ராமநாதபுரம் எம்.பியுமான நவாஸ்கனி நேற்று மணமேல்குடி ஒன்றியத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அவருடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் சென்றனர். அவர்கள் அம்மாபட்டினத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டு கோட்டைப்பட்டினம் நோக்கி சென்றனர். அப்போது வடக்கு புதுக்குடி மற்றும் தெற்கு புதுக்குடி பகுதிகளில் பிரசாரம் செய்ய வந்த அதிமுக வேட்பாளர் ராஜ நாயகத்திற்காக காத்திருந்த அதிமுக கூட்டணி கட்சியினர் சாலையை மறித்தபடி நின்றுள்ளனர். 

அப்போது திமுக கூட்டணியினர் வந்த பைக்குகளுக்கு அதிமுக கூட்டணியினர் வழி விடவில்லை என கூறப்படுகிறது. தாங்கள் கோட்டைப்பட்டினம் செல்ல வழி விடுங்கள் என திமுக கூட்டணி கட்சியினர் கேட்டதற்கு ஆத்திரமடைந்த அதிமுக கூட்டணியினர் திமுக கூட்டணி கட்சியினரை தாக்கினர். இதில் மனித நேய மக்கள் கட்சி நிர்வாகி சேக் தாவுது உள்ளிட்ட சிலர் படுகாயம் அடைந்தனர்.

மேலும் அதிமுக கூட்டணியினர் திமுக கூட்டணி கட்சியினரின் பைக்குகள் மற்றும் காரை அடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி தலைமையில் திமுக கூட்டணி கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோட்டைப்பட்டினத்தில் ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Source: தினகரன்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments