ஆலங்குடி பகுதியில் சூறைக்காற்றுடன் மழை: பல லட்சம் மதிப்புள்ள வாழைகள் நாசம்



ஆலங்குடி அருகே உள்ள களபம் ஊராட்சி ஆண்டிக்கோன் பட்டியில் விவசாயிகள் வாழை பயிரிட்டிருந்தனர் வாழைத்தார்கள் அறுவடைக்குத் தயாராக இருந்தன.

இந்நிலையில் நேற்று சூறைக் காற்றுடன் பெய்த மழையால் தாருடன் வாழைமரங்கள் சரிந்து விழுந்தன. 12 மாதமாக உரமிட்டு நீர் பாய்ச்சி வளர்த்த வாழைமரங்கள் சரிந்தது. இதனால் பல லட்சம் மதிப்புள்ள வாழைகள் நாசமானதால் விவசாயிகள் மிகுந்த கவலைக்குள்ளாகினர். இதேபோல் வடகாடு மற்றும் மாங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மாலையில் மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால் சற்று வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆதனக்கோட்டை சுற்று வட்டார கிராமங்களான கணபதிபுரம், தொண்டைமான்ஊரணி மோளுடையான்பட்டி, மீனம்பட்டி, வலங்கொண்டான்விடுதி, புலவன்காடு, வாராப்பூர், வலச்சேரிப்பட்டி, கொழுந்துவாரிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்ததால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலையோரங்களில் இருந்த மரங்கள் முறிந்தும், வேரோடு சாய்ந்தது. 

இதில் சில வீடுகளில் ஓடுகளை காற்று தூக்கியும் வீசின. இதனால் பல்வேறு கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வாராப்பூர் உள்ளிட்ட சில கிராமங்களில் ஆதனக்கோட்டை மின்வாரிய ஊழியர்கள் மரங்களை அகற்றி மின்கம்பிகளை சரிசெய்த பின்னர் இரவு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments