புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடக்கம்



புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது.

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வு வருகிற மே 5-ந் தேதி தொடங்கி ஜூன் மாதம் 14-ந் தேதி வரை நடக்க உள்ளது. இதற்கான கால அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது.

இதற்கிடையே நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்-லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடந்து வருகிறது.மேலும் தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை தள்ளி வைக்க ஆசிரியர்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. இதற்கான காலை 9 மணிக்கே முக கவசத்துடன் பள்ளிகளுக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் சமூக இடைவெளியுடன் வரிசையாக நிற்க வைத்தனர். பின்னர் மாணவர்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டு, தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பயிலும் 9,095 தமிழ் வழி மாணவர்கள், 3,923 ஆங்கில வழி மாணவர்கள் என மொத்தம் 13,018 மாணவர்கள் செய்முறைத் தேர்வை எழுதினர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு ஒரு மணிக்கு நிறைவடைந்தது.

புதுக்கோட்டை அடுத்துள்ள புத்தாப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற செய்முறை தேர்வினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

பிளஸ்-2 செய்முறைத் தேர்வானது ஏப்ரல் 16-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இத்தேர்வினை இயற்பியல், வேதியியல், உயிரியியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடு உள்ளிட்ட பாடப்பிரிவினர் எழுதுகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த தேர்வினை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுகிறார்கள்.

பிளஸ்-2 செய்முறை தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கான கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி தேர்வுக்‌ கூடங்கள்‌ செய்முறைத்‌ தேர்வு தொடங்குவதற்கு முன்பும்‌, தேர்வு முடிந்த பின்பும்‌ கிருமிநாசினி கொண்டு சுத்தம்‌ செய்ய வேண்டும்‌. செய்முறை தேர்வு முடிந்ததும்‌ அனைத்து சாதனங்களும்‌ கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட வேண்டும்‌. தேர்வுக்கு வரும்‌ மாணவர்களை சமூக இடைவெளி விட்டு அமரச்‌ செய்ய வேண்டும்‌. ஒவ்வொரு முறையும்‌ தேர்வுக்கு எத்தனை மாணவர்களை பங்கேற்க செய்வது என்ற வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்‌. ஒவ்வொரு மாணவருக்கும்‌ 4 சதுர மீட்டர்‌ தொலைவில்‌ தேவையான சாதனங்கள்‌ வைக்கப்பட்ட வேண்டும்‌. தேவையான அளவிற்கு மாணவ, மாணவிகளுக்கு கிருமிநாசினி வழங்கப்பட வேண்டும்‌. கிருமிநாசினி தீப்பற்றும்‌ தன்மை கொண்டதாகும்‌. எனவே எரியக்கூடிய சாதனங்களை கவனமுடன்‌ கை யாள வேண்டும்‌.

கண்டிப்பாக முக கவசம்‌ அணிதல்‌, கைகளை சுத்தப்படுத்துதல்‌, சமூக இடைவெளியை பின்பற்றுதல்‌ உள்ளிட்ட விதிமுறைகளை சொல்லிக்‌ கொடுக்க வேண்டும்‌. செய்முறை தேர்வு நடக்கும் போது கதவு, ஜன்னல்களை கண்டிப்பாக திறந்து வைத்திருக்க வேண்டும்‌. உள்காற்றை வெளியே தள்ளும்‌ மின்விசிறியை ஓட விட்டிருக்க வேண்டும்‌. உரிய காற்று வசதிகள்‌ இருக்க வேண்டும்‌.

அனைத்து மாணவர்களும்‌ ஊழியர்களும்‌ உடல்‌ வெப்ப நிலையை பரிசோதனை செய்த பிறகே பள்ளிக்குள்‌ அனுமதிக்க வேண்டும்‌. தேர்வு நடக்கும் போது மாணவர்கள்‌, ஊழியர்கள்‌ முக கவசம்‌ அணிவது கட்டாய விதிகள்‌ ஆகும்‌. மாணவர்கள்‌ சொந்தமாக கிருமிநாசினி, தண்ணீர்‌ பாட்டில்கள்‌ ஆகியவற்றை கொண்டு வர அனுமதிக்கலாம்‌. ஒவ்வொரு மாணவரும்‌ தேர்வு தொடங்குவதற்கு முன்பும்‌, தேர்வு முடிந்தற்கு பின்பும்‌ கண்டிப்பாக கைகளை சுத்தம்‌ செய்ய வேண்டும்‌.

ஆய்வுக்கூடத்தில்‌ உள்ள எந்த ஒரு பொருளையும்‌, வினாத்தாளையும்‌ தொடுவதற்கு முன்பு கிருமிநாசினி பயன்படுத்திக்‌ கொள்ள வேண்டும்‌. ஏற்கனவே தேர்வு நடந்து கொண்டிருக்கும்‌ நிலையில்‌ ஒவ்வொரு பிரிவு மாணவர்களும்‌ காத்திருப்பதற்கு உரிய ஓய்வு அறைகளை ஏற்பாடு செய்திருக்க வேண்டும்‌. அந்த ஓய்வு அறைகளையும்‌ ஒவ்வொரு பிரிவு மாணவர்கள்‌ வருவதற்கு முன்பு கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்‌. பாதுகாப்பான குடிநீர்‌ தேர்வு மையத்திலும்‌, ஓய்வு அறையிலும்‌ வைத்திருக்க வேண்டும்‌.

கழிவறைகளை சிறந்த முறையில்‌ சுத்தம்‌ செய்து இருக்க வேண்டும்‌. போதிய தண்ணீர்‌ வசதிகள்‌ செய்து இருக்க வேண்டும்‌. மாணவர்கள்‌ யாருக்காவது கொரோனா பாதிப்பு இருந்தால்‌ அவர்களுக்கு மறுபடியும்‌ தேர்வு நடத்தப்படும்‌. மாணவர்களுக்கு காய்ச்சல்‌, சளி இருந்தால்‌ அவர்கள்‌ திருப்பி அனுப்பப்படுவார்கள்‌. அவர்களுக்கும்‌ வேறு தேதியில்‌ தேர்வு நடத்தப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் கறம்பக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவிகளுக்கான வேதியியல் செய்முறை தேர்வு நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள பள்ளிகளிலும் செய்முறை தேர்வு நடைபெற்றது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments