விராலிமலையில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக கூறி தனியார் பஸ்சை சிறைபிடித்த பயணிகள்!கூடுதல் கட்டணம் வசூலித்ததாக கூறி தனியார் பஸ்சை சிறைபிடித்து  பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை வழியாக மணப்பாறைக்கு தினசரி அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கி வருகின்றன. 

இந்நிலையில் நேற்று மதியம் புதுக்கோட்டையிலிருந்து விராலிமலை வழியாக மணப்பாறைக்கு சென்ற ஒரு தனியார் பஸ்சில் விராலிமலை பயணிகளிடம் ரூ.30 கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.  இது மற்ற பஸ்களை விட ரூ.4 அதிகம் என பயணிகள் குற்றம் சாட்டினர்.

மேலும் பஸ்சில் கடந்த 2009-ம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட பயணச்சீட்டை பயணிகளுக்கு வழங்கியுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை வந்த பயணிகள் இதுகுறித்து நடத்துனரிடம் கேட்டுள்ளனர். அதற்கு முறையாக நடத்துனர் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் விராலிமலை சோதனைச்சாவடி நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விராலிமலை போலீசார் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர். பின்னர் பஸ்சை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 

அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் இதுகுறித்து நடத்துனரிடம் கேட்டபோது, அதற்கு நடத்துனர் இப்பிரச்சினையை எனது முதலாளியிடம் தெரிவித்து சரி செய்து கொள்வதாக கூறியதையடுத்து போலீசார் பஸ்சை விடுவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments