ஜெகதாப்பட்டினம் அருகே அய்யம்பட்டினத்தில் ஆற்றை தூர்வார கோரி கிராம மக்கள் சாலை மறியல்!ஜெகதாப்பட்டினம் அருகே ஆற்றை தூர்வாரகோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்கள் டீசலை உடலில் ஊற்றி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள அய்யம்பட்டினம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் உள்ளன. புயல் மட்டும் பேரிடர் காலங்களில் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல அப்பகுதியில் ஒரு ஆறு உள்ளது. அந்த ஆறு சரிவர தூர்வாரப்படாததால் படகுகளை நிறுத்தி வைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே ஆற்றை தூர்வார அப்பகுதியினர் பலமுறை கோரிக்கை விடுத்தனர்.ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த மாதம் ஆற்றை தூர்வார கோரி அப்பகுதி மக்கள் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை மணமேல்குடி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினர். அப்போது விரைவில் ஆற்றை தூர்வாரி தரப்படும் என்று கூறப்பட்டதாக தெரிகிறது. இதனால் அந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
ஆனால் இன்னும் தூர்வாரப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் படகுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கோட்டைபட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன், இன்ஸ்பெக்டர் சாமுவேல் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தைக்கு தீர்வு ஏற்படவில்லை. இதனையடுத்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.
அப்போது அவர்கள் தங்களது ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை சாலையில் வீசினர். இதில் சிலர் தங்களது உடலில் டீசலை ஊற்றிக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் சம்பவ இடத்திற்கு மணமேல்குடி தாசில்தார் ஜமுனா வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் 2 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் சுமார் 3 மணிநேரம் நடந்தது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments