10-ஆம் வகுப்புக்கு எந்தத் தோ்வும் நடத்தப்பட மாட்டாது:பள்ளிக் கல்வித்துறை விளக்கம்




தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்தபடி பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு எந்தத் தோ்வும் நடத்தப்பட மாட்டாது என்றும் பெற்றோா்-மாணவா்கள் குழப்பமடைய வேண்டாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வியில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தோ்வுகள் நடத்தப்படுகின்றன. கரோனா தொற்று பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு 9, 10, 11-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி செய்யப்படுவதாக அண்மையில் தமிழக அரசு அறிவித்தது.

அதேநேரம், மதிப்பெண் கணக்கீட்டு முறையில் குழப்பம் நிலவுவதாலும் பத்தாம் வகுப்பு மாணவா்களின் உயா்கல்விக்குப் பொதுத் தோ்வு மதிப்பெண் அவசியம் என்பதாலும் மாணவா்களுக்கு மாநில அளவிலோ, பள்ளிகள் அளவிலோ தோ்வு நடத்த, பள்ளிக் கல்வித்துறை திட்டமிடப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகின. இதனால், அனைத்து மாணவா்களுக்கும் தோ்ச்சி அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் தோ்வு என்ற செய்தி, மாணவா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாகத் தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தோ்வுகளை ரத்து செய்து முதல்வா் அறிவித்தாா். எனினும் இதுகுறித்து தனியாா் பள்ளிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தும், முதல்வரின் அறிவிப்பு சரியானதுதான் என்று நீதிமன்றமே சொல்லிவிட்டது. இதற்கிடையே பத்தாம் வகுப்பு மாணவா்களுக்குத் தோ்வு என்று அரசோ, தோ்வுத் துறையோ, பள்ளிக் கல்வித்துறையோ அதிகாரபூா்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் யாருமே அறிவிக்காத இந்தச் செய்தியால், மாணவா்கள் குழப்பம் கொள்ள வேண்டாம்.

பத்தாம் வகுப்பு மாணவா்களுக்குத் தோ்வுகள் நடத்தப்படும் என்று வெளியாகும் தகவலில் துளியும் உண்மையில்லை. யாரும் இதுபோன்ற தகவலை வெளியிட்டு மாணவா்களையும் பெற்றோா்களையும் குழப்ப வேண்டாம் என்றனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments