வாக்கு எண்ணிக்கையில் சுற்றுக்கு 10 மேசைகள் வீதம் பயன்படுத்தும் திட்டத்தைக் கைவிடுக: புதுக்கோட்டை வேட்பாளர்கள் வலியுறுத்தல்
வாக்கு எண்ணிக்கையின்போது சுற்றுக்கு 10 மேசைகள் வீதம் பயன்படுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என புதுக்கோட்டை மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் வேட்பாளர்கள் இன்று (ஏப்.21) வலியுறுத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.இந்த வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கையின்போது பொதுவாக சுற்றுக்கு 14 வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகளை எண்ணும் வகையில் 14 மேசைகள் பயன்படுத்தப்படும். அதற்கேற்ப, நுண்பார்வையாளர்கள், கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுவர். வேட்பாளர்கள் தரப்பில் இருந்து முகவர்களும் நியமிக்கப்படுவர்.

இந்நிலையில், கரோனா பரவல் அதிகமாக இருப்பதால் ஒரே இடத்தில் அதிகமானோர் கூடுதவதைத் தவிர்ப்பதற்காக, தலா 10 மேசைகளைப் பயன்படுத்த உள்ளதாகத் தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் பி.உமா மகேஸ்வரியிடம், புதுக்கோட்டை மாவட்ட மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் இன்று கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், திமுக வேட்பாளர்கள் எஸ்.ரகுபதி (திருமயம்), சிவ.வீ.மெய்யநாதன் (ஆலங்குடி), வி.முத்துராஜா (புதுக்கோட்டை), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னத்துரை (கந்தர்வக்கோட்டை), திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் மற்றும் முகவர்கள் கலந்துகொண்டனர்.

மாவட்டத் தேர்தல் அலுவலர் சந்திப்புக்குப் பின்னர் வேட்பாளர்கள் கூறும்போது, ''சுற்றுக்கு 10 மேசைகளாகக் குறைப்பதால் இரவு வரை வாக்கு எண்ணிக்கை நீடிக்கும் என்பதால் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோர் கடும் சோர்வுகளுக்கு ஆளாவர். மேலும், முறைகேடுகள் நடக்கவும் வாய்ப்பு உள்ளதால் அத்தகைய திட்டத்தைக் கைவிட வேண்டும்.

வாக்கு எண்ணும் இடத்தில் வெப் கேமரா பொருத்துவது, கூண்டு அமைப்பது போன்ற பணிகளைத் தற்போது மேற்கொள்வதைத் தவிர்த்துவிட்டு, வாக்கு எண்ணும் நாளுக்கு முந்தைய நாள், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் முன்னிலையில் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது'' என்று தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments