துபாயில் உயிரிழந்தவரின் உடலை.. சொந்த ஊர் எடுத்துவர உதவிய.. ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள்
துபாயில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தவரின் உடலைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க, திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் செய்த உதவியை தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.


துபாயில் உள்ள தனியார் நிறுவனத்துக்குச் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த முத்துராமன் என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு வேலைக்காகச் சென்றார். சில மாதங்கள் கழித்து, அவர் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் அவர் சத்வா பகுதியில் உடல் நலக்குறைவால் இறந்தார். இது குறித்து துபாய் போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை செய்தனர். உயிரிழந்தவரின் உடல் அடையாளத்தைக் கண்டுபிடித்து, துபாய் போலீசார் இந்திய துணை தூதரகத்துக்குத் தகவல் கொடுத்தனர்.

இந்திய துணை தூதரக அலுவலர் இறந்தவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டனர், மேலும், அவரது உடலை ஒப்படைக்குமாறு திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் முதுவை ஹிதாயத்தை தொடர்பு கொண்டனர்.

முதுவை ஹிதாயத் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக உதவியாளர் டக்ளஸ் ராஜ்குமார், கவிஞர் கவிதா சோலையப்பன் ஆகியோர் மூலம் உயிரிழந்தவரின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு விவரத்தைத் தெரிவித்தனர். இந்திய துணை தூதரகத்தின் உதவியுடன் அவரது உடல் திருச்சி விமான நிலையத்துக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.


எனினும் விமான நிலையத்தில் இருந்து சொந்த ஊருக்கு ஆம்புலன்சுக்கான கட்டணம் செலுத்த முடியாமல் அந்த குடும்பத்தினர் தவித்தனர். அந்த குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, ஆம்புலன்ஸ் வசதியும் இலவசமாக ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. இந்த முயற்சியில் முஹம்மது இசாக், ஜாபர் சித்திக், பேராசிரியர் செய்யது முஹம்மது உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டனர்.


மேலும் விமானம் திருச்சி செல்ல தாமதம் ஏற்பட்டதால் அந்த குடும்பத்தினர் திருச்சியில் தங்குவதற்குத் தேவையான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. இதற்காக அந்த குடும்பத்தினர் இந்திய துணை தூதரகத்துக்கும், திருச்சி ஜமால் முஹமது கல்லூரி முன்னாள் மாணவர்களுக்கும் தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments