அறந்தாங்கி அருகே மாட்டு வண்டியில் சென்றபோது தொண்டையில் தார்குச்சி குத்தி சிறுவன் உயிரிழந்தான்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொன்னக்காட்டை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராகுல் (வயது 14). அரசர்குளம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். ராகுல் நேற்று அதே பகுதியில் உள்ள அவரது உறவினர் பழனியப்பன் வீட்டிற்கு சென்றான். பழனியப்பன் பந்தயத்திற்காக மாட்டு வண்டி ஒன்று வைத்துள்ளார். 

இந்நிலையில் அந்த மாட்டு வண்டியை பழனியப்பன் பயிற்சிக்கு எடுத்தபோது சிறுவன் ராகுலும் நானும் வருகிறேன் என கூறி மாட்டு வண்டியில் ஏறிக் கொண்டான். பின்னர், வல்லவாரி காலனி பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டபோது மாட்டை குத்துவதற்காக வைத்து இருந்த தார்குச்சியை ராகுல் கையில் வைத்திருந்தான். 

அந்த தார்குச்சியின் இரும்பு முனை கூர்மையாக இருந்தது. ஒரு பள்ளத்தில் மாட்டு வண்டி ஏறி இறங்கிய போது தார்குச்சியின் கூர்மையான பகுதி ராகுலின் தொண்டை குழியில் குத்தியது. இதில் படுகாயம் அடைந்த ராகுல் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். 

அங்கு ராகுலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தார்குச்சி தொண்டையில் குத்தி சிறுவன் இறந்த சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments