செல்போனை பறித்துச் சென்ற திருடர்களை விரட்டிச் சென்றபோது கல்லூரி துணை முதல்வர் உயிரிழப்பு
தஞ்சாவூரில் தனது செல்போனை வழிப்பறி செய்த திருடர்களை இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்ற கல்லூரி துணை முதல்வர் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

தஞ்சாவூர் எல்ஐசி காலனி 2-வது தெருவைச் சேர்ந்தவர் பேராசிரியர் ஜியாவுதீன்(58). இவர், அதிராம்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் துணை முதல்வராக பணிபுரிந்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில், தஞ்சாவூர் யாகப்பா நகரில் உள்ள பள்ளிவாசலில் ரம்ஜான் மாத தொழுகையை முடித்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது, எலிசா நகர் அருகே சாலையோரமாக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, தனது செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அந்நேரத்தில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், ஜியாவுதீனின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். அதிர்ச்சியடைந்த ஜியாவுதீன், தனது இருசக்கர வாகனத்தில் திருடர்களை விரட்டிச் சென்றார்.

முனிசிபல் காலனி 1-வது தெருவில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஜியாவுதீன் உயிரிழந்தார். இதுகுறித்து மருத்துவக் கல்லூரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments