கொரோனா தொற்று பாதிப்பு சந்தேகமா? என்ன செய்யவேண்டும்? வீட்டில் அவசியத் தேவை என்ன?- முழு விவரம்




கரோனா தொற்று குறித்த தேவையற்ற பதற்றம், ஒருவேளை பாதிக்கப்பட்டால் என்ன செய்வது, என்ன பொருட்கள் வீட்டில் அவசியம் இருக்க வேண்டும் என்பது குறித்த முக்கியப் பதிவு இது.

பல பல்கலைக்கழங்கள் கரோனா நோயாளிகள் குறித்து நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில், ஒரு கரோனா நோயாளி சமூக விலகல் நடவடிக்கையைப் பின்பற்றாவிட்டால், அடுத்த 30 நாட்களில் அவர் மூலம் 406 பேருக்கு கரோனா தொற்று பரவக்கூடும்.

அதேசமயம், அந்த கரோனா நோயாளி சமூக விலகலைக் கடைப்பிடித்து, கரோனா தடுப்பு விதிகளை 50 சதவீதம் வரை கடைப்பிடித்தால், அடுத்த 30 நாட்களில் அவர் மூலம் 15 பேர் மட்டுமே பாதிக்கப்படுவார்கள்.

அதே கரோனா நோயாளி, சமூக விலகல் விதிகளையும், கரோனா கட்டுப்பாடுகளையும் தீவிரமாகக் கடைப்பிடித்தால், அடுத்த 30 நாட்களில் அவர் மூலம் 2 அல்லது 3 பேர் மட்டுமே பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதேபோன்று தற்போதுள்ள நிலையில் சிறிய இருமல், காய்ச்சல் இருந்தால் கூட கரோனாவோ என்கிற சந்தேகமும், பயமும் வருகிறது. இதனால் பதற்றம் ஏற்பட்டு கவலைப்படுவோர் அதிகம். அதே நேரம் கரோனா தொற்று ஏற்பட்டும், சாதாரண காய்ச்சல் என ஒதுக்குவோர் முற்றும்போது பாதிக்கும் நிலை வரலாம்.

சந்தேகம் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்வது அல்லது ஸ்க்ரீனிங் சென்டருக்குச் செல்வது சிறந்தது. முகக்கவசம் அணிவதும் தற்போதுள்ள இரண்டாம் அலை பரவலில் இரட்டை முகக்கவசம் அணியும் தேவை ஏற்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கை என்ன ?

கரோனாவைத் தடுக்க 3 முன்னெச்சரிக்கை பயிற்சி:

முகக்கவசம் அணிதல், இடைவெளியைப் பின்பற்றுதல், கைகளைக் கழுவுதல்.

முகக்கவசத்தை எப்படிப் பயன்படுத்துவது, எப்படி அணிவது?

1. குறைந்தது ஐந்து N-95 முகக்கவசங்களாவது வாங்கி வைத்திருக்க வேண்டும்.

a. அவற்றை ஒவ்வொரு நாளும் சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும். அதில் இருக்கும் வைரஸ் செயலிழக்கும் வரை அவற்றைக் காய வைக்க வேண்டும் (குறைந்தது 72 மணி நேரம்). அவற்றைத் துவைக்க வேண்டாம்.

b. பயன்பாட்டுக்கு இடையே அவற்றைத் தொங்கவிட்டுக் காய வைக்கலாம் அல்லது சுத்தமான, காற்று புகக்கூடிய பேப்பர் பைகள் போன்றவற்றில் காய வைக்கலாம். முகக்கவசங்கள் ஒன்றின் மேல் ஒன்று படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். மேலும் உங்கள் முகக்கவசங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

2. அல்லது செலவைக் குறைக்க இன்னொரு வழியைக் கையாளலாம்: இரண்டு முகக்கவசங்கள் பயன்படுத்துங்கள் - ஒரு சர்ஜிக்கல் முகக்கவசம், ஒரு துணியினாலான முகக்கவசம். (குறிப்பு: சர்ஜிக்கல் முகக்கவசத்தை 8 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்)

தடுப்பு முறைக்கு எப்போதும் தயாராக இருங்கள்

முடிந்தவரை விரைவாகத் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். இந்தியாவில் தற்போது, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போடலாம். தடுப்பூசி போட்டுக் கொள்வது 70-80% தொற்று ஏற்படாமலும், 90% தீவிர நோய்கள் ஏற்படாமலும் தடுக்கிறது.

எந்த உபகரணங்கள் வீட்டில் அவசியம் இருக்க வேண்டும்?

a. தெர்மோமீட்டர் உடல் வெப்பத்தை அளக்க உதவும்.
b. பல்ஸ் ஆக்சிமீட்டர் உங்கள் ஆக்சிஜன் அளவைக் கணிக்க உதவுவது.
c. பாராசிட்டமால் காய்ச்சல் மாத்திரை

தேவைப்பட்டால் இருக்க வேண்டியவை

a. Otrivin nasal drops - மூக்கில் விடப்படும் திரவம்
b. ORS solution - வயிற்றுப்போக்குக்கு ஈடு செய்யும் மருத்துவக் கரைசல்
c. விட்டமின் சி மாத்திரை- எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
d. Zinc plus Vitamin B- எதிர்ப்பு சக்திக்காக
e. Pantocid - வயிற்றுப்போக்குக்காக
f. Vaporiser machine for steam inhalation - ஆவி பிடிப்பதற்காக

* கோவிட் 19-ன் முதல் அறிகுறி தென்பட்டால், தடுப்பூசி போட்டிருந்தாலும், இதற்கு முன்பு தொற்று ஏற்பட்டிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

* அறிகுறியின் முதல் நாள், நோயின் முதல் நாளாகக் கருதப்படுகிறது.

கோவிட் 19 அறிகுறிகள் என்னென்ன?

1. காய்ச்சல் அல்லது குளிர்

2. இருமல்

3. சுவாசிப்பதில் சிரமம் அல்லது குறைவான சுவாசம்

4. சோர்வு

5. உடல் அல்லது தசை வலி

6. தலைவலி

7. சுவை அல்லது வாசனைத் திறன் இழப்பு

8. தொண்டை வலி

9. சளி அல்லது மூக்கு ஒழுகுதல்

10. மயக்கம் அல்லது வாந்தி

11. வயிற்றுப்போக்கு

காய்ச்சலைத் தவிர உங்களுக்கு வேற எந்த அறிகுறியும் இல்லையென்றால் உங்களுக்குத் தேவை பாராசிட்டமால் மட்டுமே.

கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அவசர சிகிச்சை மையத்தைத் தொடர்பு கொள்ளவும்:

1. சுவாசிப்பதில் சிரமம்.

2.நெஞ்சுப் பகுதியில் நீடித்த வலி அல்லது அழுத்தம்

3. புதிய குழப்பம்

4. தூக்கத்திலிருந்து கண்விழிக்க இயலாமை அல்லது தொடர்ந்து விழித்திருக்க இயலாமை

5. தோலின் நிறத்தைப் பொறுத்து வெளிர், சாம்பல் அல்லது நீல நிற தோல், உதடுகள் அல்லது நகக் கண்கள்.

உங்களுக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டால்?

பீதி அடைய வேண்டாம். கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றவும்.

1. அடுத்தவர்களிடமிருந்து விலகி இருங்கள். மற்றவர்களும் உடன் இருந்தால் முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள்.

2.ஓய்வெடுத்துக் கொண்டு உங்களுக்கான திரவங்களைத் தொடர்ந்து உட்கொள்ளுங்கள். உதாரணம்: ORS

3. தெர்மாமீட்டரைப் பயன்படுத்தி உங்களுடைய உடல் வெப்பத்தைத் தொடர்ந்து கண்காணித்து வாருங்கள். ஒரு நாளைக்கு 2-3 முறை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

4. பல்ஸ் ஆக்சிமீட்டர் உதவியுடன் உங்கள் ஆக்சிஜன் அளவைக் கணக்கிடுங்கள். அது டிஜிட்டல் முறையில் உங்கள் ரத்தத்தின் ஆக்சிஜன் அளவு மற்றும் நாடித் துடிப்பு இரண்டையும் கணக்கிடும். ஓய்வெடுக்கும் நேரத்தில் உங்கள் ரத்த ஆக்சிஜன் அளவைக் கணக்கிடுங்கள்.

6 நிமிட வேகமான நடைக்குப் பிறகு மீண்டும் பரிசோதனை செய்யுங்கள். இரண்டு அளவீடுகளையும் குறித்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு 2-3 முறை இதைச் செய்யுங்கள். உங்களுடைய குறைந்தபட்ச அளவு 94க்குக் கீழ் சென்றால் மருத்துவமனையைத் தொடர்பு கொள்ளுங்கள்.

5. உங்களுக்கான உதவி வரும்வரை, உங்கள் வயிறு, நெஞ்சு ஆகியவை தரையில் படுமாறு குப்புறப்படுங்கள்.

உங்களுக்கு என்ன மருந்துகள் தேவை?

Remdesivir/ Tocilizumab போன்ற மருந்துகள் உங்களுக்கு எப்போது தேவை என்பதை உங்கள் மருத்துவரை முடிவு செய்ய அனுமதியுங்கள். அவை மிகவும் குறைவான சூழல்களில் மட்டுமே பலனளிக்கக் கூடியவையாக இருக்கின்றன. அவற்றைப் பரிந்துரை செய்யக் கோரி உங்கள் மருத்துவருக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள். தேவையற்ற பரிந்துரைகளே இன்றைய தட்டுப்பாட்டுக்குக் காரணம். மற்ற மருந்துகளைச் சுயமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

எச்சரிக்கையுடன் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்.

(மருத்துவர்கள் அறிவுரைகள், உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறைகள், வேறு சில அதிகாரபூர்வ மருத்துவ அறிவுரைகளின் அடிப்படையில் இது தொகுக்கப்பட்டுள்ளது.)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments