ஏ.டி.எம். கார்டை நூதனமுறையில் திருடி பணம் திருட்டு
அறந்தாங்கியில் ஏ.டி.எம்.கார்டை நூதனமுறையில் திருடி பணத்தை திருடி சென்ற வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஏ.டி.எம்.கார்டு திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள நாட்டுமங்களத்தை சேர்ந்தவர் பூங்கோதை (வயது 45). இவர் நேற்று அறந்தாங்கி பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு கூட்டமாக இருந்ததால் பணம் எடுக்காமல் புறப்பட தயாரானார். அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் அருகே உள்ள ஏ.டி.எம். எந்திரத்திலும் கூட்டமாகதான் உள்ளது. இங்கு சிறிதுநேரம் காத்திருந்தால் பணத்தை எடுத்து சென்றுவிடலாம் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து அவர் சிறிதுநேரம் அங்கு நின்று கூட்டம் கலைந்ததும் பணத்தை எடுக்க சென்றுள்ளார். இதனிடையே அந்த வாலிபர் பூங்கோதையின் ஏ.டி.எம்.கார்டை நூதன முறையில் திருடி, வேறு ஒரு ஏ.டி.எம்.கார்டை வைத்துவிட்டார்.

ரகசிய எண்ணை தெரிந்து கொண்டார்

தொடர்ந்து பூங்கோதை அந்த கார்டை வைத்து பணம் எடுக்க முயன்றபோது, பணம் வரவில்லை. மீண்டும், மீண்டும் ரகசிய எண்ணை பதிவு செய்துபார்த்தும் பணம்வரவில்லை. இதற்கிடையே அருகே நின்ற வாலிபர் அந்த ரகசிய எண்ணை தெரிந்து கொண்டார். பின்னர் அந்த வாலிபர் அங்கு இருந்து சென்றுவிட்டார்.

இந்தநிலையில் ஏ.டி.எம். மையத்தில் இருந்து வெளியே வந்த பூங்கோதை கார்டை பார்த்தபோது, அதுதன்னுடையது அல்ல என தெரியவந்தது. மேலும் அந்த வாலிபரையும் காணவில்லை. அப்போது தான் அந்த வாலிபர் தனது கார்டை திருடி வேறு ஒரு கார்டை வைத்து விட்டு சென்றது தெரியவந்தது.
பின்னர் பூங்கோதை சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று ஏ.டி.எம்.கார்டை செயல்இழக்க செய்து, வங்கி கணக்கை சரிபார்த்தபோது, அதில் ரூ.1,200 திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

வாலிபர் பிடிபட்டார்

இதனிடையே அந்த வாலிபர் வங்கி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, பூங்கோதை கூச்சலிட்டு  அக்கம்பக்கத்தினர் உதவிஉடன் அந்த வாலிபரை பிடித்தார். அதன்பின் அந்த வாலிபரை புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் தஞ்சாவூர் பர்மாகாலனியை சேர்ந்த விக்னேஷ் (26) என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments