கேரளாவில் முழு ஊரடங்கு தேவையில்லை: கேரள மந்திரி சபை தீர்மானம்

கேரள மந்திரி சபை கூட்டம் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது:-


கேரளாவில் கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக நோய் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை சராசரியாக 20 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. 15 சதவீதத்திற்கும் கூடுதலாக இருந்தால் முழு ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. கேரளாவை பொறுத்தவரை சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி ஊரடங்கு தளர்வுகளுடன் அமலில் உள்ளது.

மேலும், தற்போது தியேட்டர்கள், மதுக்கடைகள், பார்கள் மூடப்பட்டு உள்ளன. அதேபோல், சுற்றுலா மையங்கள், பொழுதுபோக்கு பூங்கா உள்பட அனைத்து பொழுதுபோக்கு கேளிக்கை இடங்களுக்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் சனி, ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால் கேரளாவில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தற்போதைய அத்தியாவசிய தேவையை முன்னிட்டு 1 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்தை வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் 70 லட்சம் டோஸ் கோவிஷீல்டும், 30 லட்சம் டோஸ் கோவாக்சினும் வாங்கப்படும். மே மாத தொடக்கத்தில் 10 லட்சம் டோஸ் தடுப்பூசி இறக்குமதி செய்யப்படும்.

இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட நிறுவனங்களுடன், அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஜூலை மாத இறுதிக்குள் 1 கோடி டோஸ் மருந்துகளும் கொள்முதல் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. கொரோனா தடுப்பு மருந்துக்கான 50 சதவீத செலவை மாநில அரசு ஏற்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இதனால் கேரள அரசுக்கு ரூ.1300 கோடி செலவாகும். இது மிகப்பெரிய பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும். மத்திய அரசு அனைத்து மருந்துகளையும் இலவசமாக வழங்க வேண்டும் என்பது கேரள அரசின் கோரிக்கை. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் மத்திய அரசிடம் இருந்து சாதகமான பதில் வராததால், 1 கோடி டோஸ் தடுப்பூசி வாங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments