ரமலான் மாதம் பள்ளிவாசல்களில் இரவு நேர தொழுகைக்கு 11 மணி வரை அனுமதிக்க வேண்டும் என தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரிடத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை மனு!






கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவிய நிலையில் அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியது. அதன் பிறகு ஊரடங்கு படிப்படியாக  தளர்வு அளிக்கப்பட்ட போது அரசு அறிவித்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பள்ளிவாசல்களில் தொழுகை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றது.
இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஏப்ரல் 10 முதல் புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. அதில் இரவு 8.00 மணிக்கு மேல் பொதுவழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் இஸ்லாமியர்களின் ஐந்து பெரும் கடமைகளின் ஒன்றான புனித ரமலான் மாதம் சில தினங்களில் துவங்க இருக்கிறது. இந்த மாதத்தில் முஸ்லிம்கள் காலை முதல் மாலை வரை நோன்பிருந்து இரவு நேரங்களில் இறைவனை தொழுது பிரார்த்தனையில் ஈடுபடுவர். இல்லாதோர்க்கு உதவிடுவர்.

கடந்த ஆண்டு முழு ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தால் இரவு நேர பிரார்த்தனைகளில் முஸ்லிம்கள் முழுமையாக ஈடுபட முடியவில்லை. தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பிலும் இரவு நேர வழிபாடு தடுக்கப்பட்டிருக்கிறது. இது புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் இழப்பாக அமையும்.தமிழக அரசு  முஸ்லிம்களை இரவு நேர தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு.

எனவே இதனை கருத்தில் கொண்டு இரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் இரவு நேர தொழுகைக்காக இரவு 11 மணி வரை அனுமதிக்க வேண்டும் என  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments