பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி; 15 நாட்களுக்கு முன் அறிவிக்கப்படும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம்


பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி, தேர்வு தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன் அறிவிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு மே 5 முதல் 21-ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே நாடு முழுவதும் கரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை சிபிஎஸ்இ ரத்து செய்தது. மேலும், பிளஸ் 2 பொதுத் தேர்வையும் தள்ளி வைத்துது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் கடந்த 15-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பள்ளிக் கல்வித்துறைச் செயலர் தீரஜ் குமார் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகவும் செய்முறைத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி, தேர்வு தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன் அறிவிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி இன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

'' * மேல்நிலை 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு பின்னர் நடைபெறும் நாட்கள் குறித்த விவரம், தேர்வுகள் தொடங்குவதற்குக் குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்னர் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் அறிவிக்கப்படும்.

* அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் இதுகுறித்த தகவலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அவர்களின் வாயிலாக மாணவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

* செய்முறைத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்.

* செய்முறைத் தேர்வு மற்றும் அக மதிப்பீட்டுக்கான மதிப்பெண்களை ஏற்கெனவே அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் அறிவுறுத்தப்பட்ட நாட்களில் இணையதளத்தின் வாயிலாகப் பதிவேற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments