புதுக்கோட்டையில் ஓட்டுப்பதிவு எந்திரங்களின் அறைகளுக்கு சீல் வைப்புவாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு கலெக்டர் உமாமகேஸ்வரி பேட்டி





           
புதுக்கோட்டையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டன

அறைகளுக்கு சீல்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 தொகுதிகளில் அமைதியாக நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேன் மற்றும் லாரிகளில் வாக்கு எண்ணும் மையமான புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன. கந்தர்வகோட்டை (தனி), விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு தனித்தனியாக அறை ஒதுக்கப்பட்டிருந்தன. அந்த அறைகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பத்திரமாக வைக்கப்பட்டன.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்து சேர நேற்று காலை வரை ஆனது. ஸ்டிராங் ரூம் என அழைக்கப்படும் பாதுகாப்பான அறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட பின் அந்த அறைக்கு சீல் வைத்து பூட்டப்பட்டன. இந்த பணி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான உமாமகேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் முன்னிலையில் நடைபெற்றது. தேர்தல் பார்வையாளர்களும் உடன் இருந்தனர்.
மின் விளக்குகள்
சீல் வைக்கப்பட்ட அறைகளுக்கு 2 சாவிகள் பயன்படுத்தப்படுகிறது. ஒரு சாவி மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியிடமும், மற்றொரு சாவி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் இருப்பதாக கூறப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்தில் இரவு, பகல் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். வாக்கு எண்ணும் மையத்தில் ஏராளமான மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் இரவில் வாக்கு எண்ணும் மையம் பகல் போல காணப்படுகிறது. மே மாதம் 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிற நிலையில் அதுவரை அரசியல் கட்சி வேட்பாளர்களின் முகவர்களும், கட்சியினரும் வாக்கு எண்ணும் மையத்தை கண்காணிக்க தொடங்கி உள்ளனர்.
போலீஸ் பாதுகாப்பு
இந்த நிலையில் கலெக்டர் உமாமகேஸ்வரி நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறுகையில், வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் 140 துணை ராணுவ படையினரும், 2-வது அடுக்கில் சிறப்பு காவல் படையினரும், 3-வது அடுக்கில் மாவட்ட போலீசார் 100 பேரும் சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர். ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை தினமும் தேர்தல் நடத்தும் அதிகாரி பார்வையிட்டு கையெழுத்து ஏடு பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் வரை ஒவ்வொரு நாளும் ஆய்வு நடைபெறும்' என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments